மாணவியை காதலித்து திருமணத்துக்கு மறுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது.மிரட்டல் விடுத்த சப்-இன்ஸ்பெக்டருக்கு வலைவீச்சு
திருப்பத்தூரில் பள்ளி மாணவியை காதலித்து, திருமணத்துக்கு மறுத்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் மகன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். மிரட்டல் விடுத்த சப்-இன்ஸ்பெக்டரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர்
சப்-இன்ஸ்பெக்டர் மகன்
திருப்பத்தூரை அடுத்த குரிசிலாப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன் (வயது 52). நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் மனோஜ்குமார் (21). பெங்களூரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக தனது தந்தையுடன் திருப்பத்தூர் காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார்.
மனோஜ்குமாருக்கும், கந்திலி அடுத்த மானவள்ளி பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மாணவியின் அக்காள்கணவரும் போலீஸ் ஏட்டாக பணிபுரிவதால் அவர் திருப்பத்தூர் காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். இதனால் மனோஜ் குமாருக்கும், மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு ஒரு வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
போக்சோ சட்டத்தில் கைது
மனோஜ்குமாருக்கு, மாணவியை திருமணம் செய்துவைக்க, அவருடைய அக்காள், சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகனிடம் கூறியதற்கு 30 பவுன் நகை மற்றும் கார் வரதட்சணையாக கொடுத்தால் மட்டுமே திருமணம் செய்து வைப்பதாக கூறி, திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் எந்த போலீஸ் நிலையத்தில் வேண்டுமானாலும் புகார் கொடு என்றும் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனையடுத்து மாணவியின் தந்தை திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி மனோஜ்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். கொலை மிரட்டல் விடுத்த சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகனை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story