இருசக்கர வாகனங்கள், கார், ஆட்டோ கிரீன் சர்க்கிள் வழியாக செல்ல தடை
இருசக்கர வாகனங்கள், கார், ஆட்டோ கிரீன் சர்க்கிள் வழியாக செல்ல தடை
வேலூர்
வேலூர் புதிய பஸ்நிலையம் அருகே கிரீன் சர்க்கிளில் வாகன நெரிசலை குறைக்க போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. வேலூரில் இருந்து காட்பாடிக்கு செல்லும் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, கார் ஆகிய வாகனங்கள் கிரீன்சர்க்கிள் பகுதி வழியாக செல்லாமல் மாற்று வழியில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த போக்குவரத்து மாற்றம் நேற்று காலை முதல் நடைமுறைக்கு வந்தது.
பாகாயம், தொரப்பாடி, தோட்டப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காட்பாடி சாலை, பழைய பைபாஸ் சாலை வழியாக காட்பாடிக்கு செல்லும் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, கார்கள் கிரீன் சர்க்கிள் வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டது. அதற்கு பதிலாக நேஷனல் சிக்னலில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே இடதுபுறத்தில் செல்லும் சாலை வழியாக சென்னை-பெங்களூரு சர்வீஸ் சாலைக்கு திருப்பி விடப்பட்டன.
சிறிதுதொலைவில் உள்ள தேசிய நெடுஞ்சாலை பாலம் வழியாக பெங்களூரு-சென்னை சர்வீஸ் சாலைக்கு சென்று வழக்கம்போல் பாலாற்று புதிய மேம்பாலம் வழியாக காட்பாடிக்கு சென்றன. வேன், லாரி, பஸ் உள்ளிட்ட வாகனங்கள் வழக்கம்போல் கிரீன் சர்க்கிள் வழியாக காட்பாடிக்கு சென்றன. போக்குவரத்து மாற்றம் குறித்து நேஷனல் சிக்னல் பகுதியில் 3 இடங்களில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. மேலும் அந்த பகுதியில் வேலூர் போக்குவரத்து போலீசார் நின்று காட்பாடிக்கு செல்லும் கார், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களை திருப்பி விடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனால் கிரீன் சர்க்கிள் பகுதியில் வழக்கத்தை விட வாகனங்களின் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டது.
Related Tags :
Next Story