ஜவுளி, நகை கடைகள் திறக்கப்பட்டன


ஜவுளி, நகை கடைகள் திறக்கப்பட்டன
x
தினத்தந்தி 29 Jun 2021 1:26 AM IST (Updated: 29 Jun 2021 1:26 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து நாகர்கோவிலில் நகைக் கடைகள் ஜவுளிக்கடைகள் திறக்கப்பட்டன.

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து நாகர்கோவிலில் நகைக் கடைகள் ஜவுளிக்கடைகள் திறக்கப்பட்டன.
நகை- ஜவுளி கடைகளுக்கு அனுமதி
தமிழகத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு நேற்று காலையுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊரடங்கில் மேலும் பல தளர்வுகளை அறிவித்து 7-வது முறையாக நீட்டித்து உத்தரவிட்டார். கூடுதலாக வழங்கப்பட்டுள்ள தளர்வுகளில் நகைக்கடைகள், ஜவுளிக் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல பல்வேறு வணிக கடைகளை திறக்கவும், பல்வேறு தொழில்களுக்கு அனுமதி அளித்தும், பொதுப் போக்குவரத்து தொடங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பெரும்பாலான கடைகள் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை திறக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
திறப்பு
இதனால் குமரி மாவட்டத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு நேற்று மீண்டும் ஜவுளி கடைகள் மற்றும் நகைக் கடைகள் திறக்கப்பட்டன. நாகர்கோவில் நகரில் மீனாட்சிபுரம், கேப் ரோடு, கோர்ட் ரோடு, கே.பி.ரோடு, வடசேரி, செட்டிகுளம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலக சாலை, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகைக் கடைகள், ஜவுளிக்கடைகள் அனைத்தும் நேற்று காலை முதல் திறக்கப்பட்டன.
இதனால் நீண்ட நாட்களாக நகை மற்றும் ஜவுளி எடுக்க முடியாமல் அவதிப்பட்ட பொதுமக்கள் கடைகளுக்கு சென்று தங்களுக்கு வேண்டியவற்றை தேர்வு செய்து வாங்கினர். இந்த கடைகளில் ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் எனவும் கொரோனா கால நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி நேற்று திறக்கப்பட்ட நகை மற்றும் ஜவுளி கடைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து விற்பனை நடைபெற்றது.
வடசேரி சந்தை
நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் செயல்பட்டு வந்த காய்கறி சந்தை, பஸ் போக்குவரத்து தொடங்கியதை தொடர்ந்து அங்கிருந்து அகற்றப்பட்டது. இதனால் நேற்று முதல் வடசேரி காய்கறி சந்தையில் உள்ள கடைகள் திறக்கப்பட்டன. அங்குள்ள மொத்த கடைகளில் பாதி கடைகள் ஒருநாளும் மீதமுள்ள கடைகள் அடுத்த நாளுமாக ஒருநாள் விட்டு ஒருநாள் மாறி மாறி திறக்க மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி நேற்று பாதி கடைகள் திறக்கப்பட்டன. ஆனால் கூட்டம் அதிகமாக இல்லை. குறைவான நபர்களே அங்கு வந்து தங்களுக்கு தேவையான காய்கறிகள் உள்ளிட்ட பொருள்களை வாங்கிச் சென்றனர். 
இதேபோல் சாலையோர பூ மற்றும் பழங்கள் விற்பனை செய்யும் கடைகள், பலகார கடைகள், உணவு பொருள் விற்பனை செய்யும் கடைகள் போன்றவையும் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது. மேலும் அரசு அனுமதி வழங்கிய பல்வேறு தொழில் மற்றும் வணிக நிறுவனங்களும் நேற்று முதல் திறக்கப்பட்டன. இதனால் நாகர்கோவில் உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கடை வீதிகளில் நேற்று மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததை காண முடிந்தது.

Next Story