முன்னாள் பெண் கவுன்சிலர் கொலையில் கைதான தாய்-மகனை 5 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை


முன்னாள் பெண் கவுன்சிலர் கொலையில் கைதான தாய்-மகனை 5 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 29 Jun 2021 1:27 AM IST (Updated: 29 Jun 2021 1:27 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் முன்னாள் பெண் கவுன்சிலர் கொலையில் கைதான தாய்-மகனை 5 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூரு:

முன்னாள் கவுன்சிலர் கொலை

  பெங்களூரு காட்டன்பேட்டை அருகே பிளவர் கார்டனை சேர்ந்தவர் ரேகா கதிரேஷ். பா.ஜனதா கட்சியை சேர்ந்த இவர் பெங்களூரு செலுவாதிபாளையா வார்டு முன்னாள் கவுன்சிலர் ஆவார். இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி பிளவர் கார்டனில் உள்ள தனது அலுவலகத்தின் முன்பு வைத்தே ரேகா கதிரேஷ் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார்.

  இதுகுறித்து காட்டன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க 6 தனிப்படையும் அமைக்கப்பட்டது. இந்த கொலை வழக்கு தொடர்பாக பிளவர் கார்டனை சேர்ந்த பீட்டர், அவரது கூட்டாளிகள் சூர்யா, ஸ்டீபன், அஜய், புருஷோத்தம் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து இருந்தனர். இவர்களில் சூர்யா, பீட்டரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்து இருந்தனர்.

கணவரின் சகோதரி-மகன் கைது

  போலீசார் விசாரணையில் பணப்பிரச்சினையில் பீட்டர், ரேகாவை கொலை செய்து இருந்தது தெரியவந்தது. மேலும் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ரேகாவுக்கும், அவரது கணவரின் சகோதரி மாலாவுக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்ததாகவும் தகவல்கள் வெளியானது.

  ஏற்கனவே பணப்பிரச்சினையில் பீட்டருக்கும், ரேகாவுக்கும் ஏற்பட்ட மோதலை சாதகமாக பயன்படுத்தி ரேகாவை கொலை செய்ய பீட்டரை மாலா தூண்டிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் மாலா, அவரது மகன் அருளை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்து இருந்தனர்.

5 நாட்கள் போலீஸ் காவல்

  இந்த நிலையில் கைதான மாலா, அருளை நேற்று போலீசார் பெங்களூரு மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது ரேகா கொலை தொடர்பாக விசாரணை நடத்த வேண்டி உள்ளதால் மாலாவையும், அருளையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதியிடம் போலீசார் அனுமதி கோரினர்.

  இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி வருகிற 2-ந் தேதி முதல் 5 நாட்கள் 2 பேரையும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார். இதையடுத்து மாலாவையும், அருளையும் தங்களது காவலில் எடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கமிஷனரிடம் மனு

  இதற்கிடையே பெங்களூரு நகர போலீஸ் கமிஷனரை நேற்று பா.ஜனதா தலைவர்கள் சிலர் சந்தித்து ஒரு மனுவை அளித்தனர். அந்த மனுவில் ரேகா கதிரேஷ் கொலையில் ரவுடி அதுசுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று எங்களுக்கு சந்தேகமாக உள்ளது. இதனால் அவரையும் கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

  அதுசின் மனைவி கடந்த 2015-ம் ஆண்டு செலுவாதிபாளையா வார்டில் ரேகாவுக்கு எதிராக போட்டியிட்டு தோல்வி அடைந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story