எடியூரப்பாவை மாற்ற வலியுறுத்தி வரும் அரவிந்த் பெல்லத் எம்.எல்.ஏ. திடீர் டெல்லி பயணம்


அரவிந்த் பெல்லத்
x
அரவிந்த் பெல்லத்
தினத்தந்தி 29 Jun 2021 1:35 AM IST (Updated: 29 Jun 2021 1:35 AM IST)
t-max-icont-min-icon

முதல்-மந்திரி எடியூரப்பாவை மாற்ற வலியுறுத்தி வரும் அரவிந்த் பெல்லத் எம்.எல்.ஏ. திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். மத்திய மந்திரி பதவிக்காக எம்.பி.க்களும் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.

பெங்களூரு:

டெல்லியில் எம்.எல்.ஏ.

  கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு வயதாகி விட்டதாலும், மந்திரி பதவி கிடைக்காததாலும், எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவின் நடவடிக்கைகள் பிடிக்காததாலும், எடியூரப்பாவை மாற்ற கோரி மந்திரி சி.பி.யோகேஷ்வர், எம்.எல்.ஏ.க்களான பசனகவுடா பட்டீல் யத்னால், அரவிந்த் பெல்லத் ஆகியோர் பா.ஜனதா மேலிடத்தை வலியுறுத்தி வருகின்றனர். மந்திரி சி.பி.யோகேஷ்வர் கடந்த 2 நாட்களாக டெல்லியில் முகாமிட்டு பா.ஜனதா மேலிட தலைவர்களை சந்தித்து பேசிவிட்டு பெங்களூருவுக்கு திரும்பியுள்ளார்.

  இந்த நிலையில், திடீரென்று அரவிந்த் பெல்லத் எம்.எல்.ஏ. பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். முதல்-மந்திரி எடியூரப்பாவை மாற்ற கோரி, அவர் மேலிட தலைவர்களை சந்தித்து பேசுவதற்கு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சில மேலிட தலைவர்களை சந்திக்க அரவிந்த் பெல்லத் எம்.எல்.ஏ.வுக்கு அனுமதி கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அவர் யாரையெல்லாம் சந்தித்து பேச இருக்கிறார்?, எதற்காக டெல்லி சென்றுள்ளார்? என்பது தெரியவில்லை.

மத்திய மந்திரி பதவிக்காக...

  எடியூரப்பாவை மாற்ற கோரி போர்க்கொடி தூக்கி வரும் மந்திரி சி.பி.யோகேஷ்வர், மற்றும் அரவிந்த் பெல்லத் அடுத்தடுத்து டெல்லி செல்வது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதே நேரத்தில் மத்திய மந்திரி சபையை மாற்றி அமைக்கவும், மந்திரிசபையை விரிவாக்கம் செய்யவும் பா.ஜனதா மேலிடம் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. மத்திய மந்திரிசபை விரிவாக்கத்தின் போது கர்நாடகத்தை சேர்ந்த ஒருவர் அல்லது 2 எம்.பி.க்களுக்கு மத்திய மந்திரி பதவி கிடைக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

  இதனால் மத்திய மந்திரி பதவியை கைப்பற்ற கர்நாடக பா.ஜனதா எம்.பி.க்களுக்கு இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. முதல்-மந்திரி எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா, முன்னாள் மந்திரி உதாசியின் மகன் சிவக்குமார் உதாசி, ஷோபா, பி.சி.மோகன் ஆகிய எம்.பி.க்கள் இந்த போட்டியில் உள்ளனர். இவர்களில் ஏற்கனவே சிவக்குமார் உதாசி டெல்லியில் முகாமிட்டுள்ளார். மற்றவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) டெல்லி செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

Next Story