பெங்களூருவில் ஜூலை மாத இறுதிக்குள் 70 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி - மாநகராட்சி கமிஷனர் கவுரவ் குப்தா பேட்டி


பெங்களூருவில் ஜூலை மாத இறுதிக்குள் 70 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி - மாநகராட்சி கமிஷனர் கவுரவ் குப்தா பேட்டி
x
தினத்தந்தி 29 Jun 2021 1:37 AM IST (Updated: 29 Jun 2021 1:37 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் ஜூலை மாத இறுதிக்குள் 70 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டு முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி கமிஷனர் கவுரவ் குப்தா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:
  
 பெங்களூரு மாநகராட்சி கமிஷனர் கவுரவ் குப்தா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி

  கொரோனா 2-வது அலை முடியும் தருவாயில் உள்ளது. நாடு முழுவதும் கொரோனா 3-வது அலை எப்போது ஏற்படும் என்ற ஆதங்கம் மக்களிடையே இருந்து வருகிறது. கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள தடுப்பூசி போட்டுக் கொள்வதே சிறந்ததாகும். டெல்டா, டெல்டா பிளஸ் உள்ளிட்ட எந்த வைரஸ்களாக இருந்தாலும், அதனை எதிர்த்து போராடுவதற்கு தடுப்பூசி ஒன்றே சிறந்த மருந்தாகும். தடுப்பூசி போட்டு கொள்ளும் நபர்கள், கொரோனா பாதிப்பில் இருந்து தப்பித்து கொள்ளலாம்.

  அதனால் தான் தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி மத்திய, மாநில அரசுகள் பொதுமக்களுக்கு வலியுறுத்தி வருகிறது. பெங்களூருவை பொருத்தவரை 18 வயதிற்கு மேற்பட்ட 50 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தினமும் 1 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. பெங்களூருவில் இதுவரை கொரோனா தடுப்பூசிக்கு எந்த விதமான தட்டுப்பாடும் இல்லை.

வீடு, வீடாக சென்று...

  கொரோனா 3-வது அலையை தடுக்கவும், 3-வது அலையை எதிர் கொள்ளவும் தடுப்பூசி போடுவது அவசியமாகும். அதனால் அடுத்த மாதம் (ஜூலை) இறுதிக்குள் பெங்களூருவில் 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட்டு முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மராட்டிய மாநிலத்தில் டெல்டா பிளஸ் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் அந்த மாநிலத்தில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை அறிக்கை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

  பெங்களூருவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு வீடு, வீடாக சென்று தடுப்பூசி போடுவதற்கும் மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது. இந்த திட்டத்தை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் வீடு, வீடாக சென்று தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும்.
  இவ்வாறு அவர் கூறினார்.

Next Story