மந்திரி பதவி விவகாரம்; சகோதரர்களுடன் ரமேஷ் ஜார்கிகோளி ஆலோசனை
மந்திரி பதவி விவகாரம் குறித்து சகோதரர்களுடன் நேற்று ரமேஷ் ஜார்கிகோளி ஆலோசனை நடத்தினார். பின்னர் மும்பை செல்லும் முடிவை கைவிட்டு அவர் பெங்களூருவுக்கு திரும்பினார்.
பெங்களூரு:
ஆபாச வீடியோ விவகாரம்
கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து பா.ஜனதா அரசு அமைய காரணமாக இருந்தவர் ரமேஷ் ஜார்கிகோளி. கடந்த மார்ச் மாதம் ஒரு இளம்பெண்ணுடன் அவர் ஆபாசமாக இருக்கும் வீடியோ வெளியானதும், மந்திரி பதவியை ராஜினாமா செய்திருந்தார். தற்போது அந்த ஆபாச வீடியோ வழக்கு ரமேஷ் ஜார்கிகோளிக்கு ஆதரவாக முடிய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதன் காரணமாக மீண்டும் மந்திரி பதவி கேட்டு பா.ஜனதா தலைவர்களுக்கு, ரமேஷ் ஜார்கிகோளி நெருக்கடி கொடுத்து வருகிறார். மேலும் எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்ய முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியானது. இதனை ரமேஷ் ஜார்கிகோளியும் ஒப்புக் கொண்டு இருந்தார்.
சகோதரர்களுடன் ஆலோசனை
இந்த நிலையில், மந்திரி பதவி விவகாரம் தொடர்பாக பெலகாவியில் நேற்று தனது சகோதரர்களான பாலசந்திர ஜார்கிகோளி, லகான் ஜார்கிகோளியுடன் ரமேஷ் ஜார்கிகோளி ஆலோசனை நடத்தினார். அப்போது மந்திரி பதவி கிடைக்காத விவகாரத்தில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம் என்றும், இந்த விவகாரத்தில் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்றும் ரமேஷ் ஜார்கிகோளியிடம், அவரது சகோதரர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து, மந்திரி பதவிக்காக நேற்று மும்பை சென்று, முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை ரமேஷ் ஜார்கிகோளி சந்தித்து பேச இருந்தார். அந்த முடிவை மாற்றிவிட்டு பெலகாவியில் இருந்து ரமேஷ் ஜார்கிகோளி பெங்களூருவுக்கு திரும்பி வந்துள்ளார். கூடிய விரைவில் டெல்லி செல்ல அவர் திட்டமிட்டுள்ளதாகவும், முதல்-மந்திரி எடியூரப்பாவை சந்தித்து பேச இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Related Tags :
Next Story