50 சதவீத பயணிகளுடன் பஸ் போக்குவரத்து தொடங்கியது
50 சதவீத பயணிகளுடன் குமரி மாவட்டத்தில் நேற்று முதல் பஸ் போக்குவரத்து தொடங்கியது. முதல் நாளில் 638 பஸ்கள் இயக்கப்பட்டன.
நாகர்கோவில்:
50 சதவீத பயணிகளுடன் குமரி மாவட்டத்தில் நேற்று முதல் பஸ் போக்குவரத்து தொடங்கியது. முதல் நாளில் 638 பஸ்கள் இயக்கப்பட்டன.
பொது போக்குவரத்து
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கை அமல் படுத்தி வருகிறது. கொரோனா தொற்று குறைய, குறைய ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. ஏழாவது முறையாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட தளர்வில் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. கடந்த மே மாதம் 10-ந் தேதி பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்ட பிறகு, மே மாதம் 22 மற்றும் 23-ந் தேதிகளில் 2 நாட்கள் மட்டும் பஸ்கள் ஓடின. இடைப்பட்ட நாட்களிலும், அதன் பிறகும் முற்றிலும் பஸ் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
இந்த நிலையில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஏற்கனவே பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டு இருந்தது. தற்போது தமிழகத்தில் தொற்று குறைந்த 23 மாவட்டங்களில் நேற்று முதல் பஸ் போக்குவரத்து தொடங்க அனுமதிக்கப்பட்டது.
பஸ்கள் ஓடின
அதன்படி குமரியில் மாவட்டத்தின் உள்ளேயும், வெளிமாவட்ட பகுதிகளுக்கும் நேற்று காலை 6 மணி முதல் பஸ் போக்குவரத்து தொடங்கியது. இதையொட்டி மாவட்டத்தின் அனைத்து பணிமனைகளில் இருந்தும் பஸ்களுக்கு கிருமி நாசினி தெளித்து பஸ் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
நேற்று காலை 6 மணி முதல் நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம் மற்றும் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயங்க தொடங்கின. வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து வெளிமாவட்ட பகுதிகளான திருநெல்வேலி, திருச்செந்தூர், தூத்துக்குடி, பாபநாசம், ராமேசுவரம், மதுரை, குமுளி உள்ளிட்ட பகுதிகளுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் நாகர்கோவில் மண்டலத்தின் சார்பில் பஸ்கள் இயக்கப்பட்டன.
638 பஸ்கள்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நாகர்கோவில் மண்டலத்தில் மொத்தம் 760 பஸ்கள் உள்ள நிலையில் முதல் நாளான நேற்று 600 பஸ்கள் இயக்கப்பட்டன. நேற்று காலையில் இருந்து மதியம் வரையில் அதிக அளவில் பயணிகள் கூட்டம் இல்லை. எனவே பஸ்களில் பயணிகள் தள்ளுமுள்ளு இன்றி பயணம் செய்தனர். 3 பேர் அமரும் இருக்கைகளில் இரண்டு பேரும், இரண்டு பேர் அமரும் இருக்கைகளில் ஒருவரும் அமர்ந்து சமூக இடைவெளியுடன் பயணம் செய்ய போக்குவரத்து கழக அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர். பயணிகள் அனைவரும் முக கவசம் அணிந்து பயணம் செய்தனர். பயணிகளுக்கு கண்டக்டர் மூலம் கிருமிநாசினி கொடுத்து கைகளை சுத்தம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதேபோல் அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் மூலமும் குமரி மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. குறிப்பாக அரசு விரைவு போக்குவரத்து கழக நாகர்கோவில் பணிமனை மூலம் சென்னை, வேலூர், திருத்தணி, கடலூர் ஆகிய பகுதிகளுக்கு 13 பஸ்கள் இயக்கப்பட்டன. கன்னியாகுமரி பணிமனை மூலம் சென்னை வேலூர் ஆகிய பகுதிகளுக்கு 7 பஸ்களும், மார்த்தாண்டம் பணிமனை மூலம் சென்னை வேலூர் ஆகிய பகுதிகளுக்கு 10 பஸ்களும், திருவனந்தபுரம் பணிமனை மூலம் மார்த்தாண்டத்தில் இருந்து வேலூர் சென்னை ஆகிய பகுதிகளுக்கு 8 பஸ்களும் என மொத்தம் 38 பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த பஸ்களும் நேற்று காலையிலிருந்து இயக்கப்பட்டன. இவற்றிலும் நேற்று கூட்டம் அதிகமாக இல்லை. பஸ்களிலும் முககவசம், சமூக இடைவெளி ஆகியவை பின்பற்றப்பட்டது. மொத்தத்தில் நேற்று குமரி மாவட்ட பகுதிகளுக்கும், வெளி மாவட்ட பகுதிகளுக்கும் 638 பஸ்கள் இயக்கப்பட்டன.
போக்குவரத்து நெருக்கடி
நேற்று பஸ் போக்குவரத்து தொடங்கியதும் குமரி மாவட்டத்தில் கொரோனா ஊரடங்குக்கு முந்தைய நிலையை காண முடிந்தது. பஸ் போக்குவரத்து தொடங்கியதால் நாகர்கோவில் நகரில் நேற்று காலை முதல் அனைத்து சாலைகளிலும் வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. பாதாள சாக்கடை திட்ட பணிகள் மற்றும் குடிநீர் திட்டப்பணிகள் ஆகியவற்றின் காரணமாக நகரின் சாலைகள் பலவற்றில் தோண்டப்பட்ட பள்ளங்கள் சரியாக மூடப்படாததாலும், சீரமைப்பு பணி முடியாததாலும் பல இடங்களில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் அந்தபகுதிகளில் போக்குவரத்து நெரிசல் உருவானது. குறிப்பாக அவ்வை சண்முகம் சாலை, இந்துக் கல்லூரி ரோடு, கோட்டார் கேப் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வாகன போக்குவரத்து நெருக்கடியை காணமுடிந்தது.
இதுபோல் குளச்சல், மார்த்தாண்டம், குலசேகரம், தக்கலை உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பஸ் நிலையங்களில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டன.
Related Tags :
Next Story