குடும்ப தகராறில் 2 குழந்தைகளை கொன்று பெண் தற்கொலை


குடும்ப தகராறில் 2 குழந்தைகளை கொன்று பெண் தற்கொலை
x
தினத்தந்தி 29 Jun 2021 1:59 AM IST (Updated: 29 Jun 2021 1:59 AM IST)
t-max-icont-min-icon

பல்லாரி டவுனில் குடும்ப தகராறில் 2 குழந்தைகளை கொன்று பெண் தற்கொலை செய்து கொண்ட விபரீத சம்பவம் நடந்து உள்ளது.

பல்லாரி:

குடும்ப தகராறு

  பல்லாரி டவுன் கவுல்பஜார் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட இந்திரா நகரை சேர்ந்தவர் சித்தப்பா. இவரது மனைவி சுனிதா(வயது 25). இந்த தம்பதிக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து இருந்தது. யஷ்வந்த்(4) என்ற மகனும், சான்வி(3) என்ற மகளும் இருந்தனர்.

  இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக சித்தப்பாவுக்கும், சுனிதாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் அவ்வப்போது கணவரிடம் கோபித்து கொண்டு சுனிதா தனது தாய் வீட்டிற்கு செல்வதும், பின்னர் அவரை சித்தப்பா சமாதானப்படுத்தி அழைத்து வருவதும் வழக்கமாக நடந்து வந்து உள்ளது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக சித்தப்பாவுக்கும், சுனிதாவுக்கும் இடையே குடும்ப தகராறு காரணமாக தினமும் சண்டை ஏற்பட்டு உள்ளது. இதனால் மனம் உடைந்த சுனிதா தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

கொலை-தற்கொலை

  ஆனால் தான் இறந்து விட்டால் குழந்தைகளை கவனிக்க யாரும் இல்லை என்று கருதிய சுனிதா, குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி நேற்று காலை குழந்தைகள் யஷ்வந்த், சான்வியை வீட்டின் முன்பு உள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்தார். பின்னர் சுனிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  இந்த நிலையில் குழந்தைகள் தண்ணீர் தொட்டியில் பிணமாக மிதப்பதை கண்டு அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வீட்டுக்குள் உள்ளே சென்று பார்த்த போது சுனிதாவும் தூக்கில் தொங்கி கொண்டு இருந்தார். இதனால் மேலும் அதிர்ந்த அக்கம்பக்கத்தினர் சம்பவம் குறித்து கவுல்பஜார் போலீசாருக்கு தகவல் கொடுத்து இருந்தனர்.

கணவரிடம் விசாரணை

  அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கவுல்பஜார் போலீசார் சுனிதா, யஷ்வந்த், சான்வியின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லாரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் மனம் உடைந்த சுனிதா குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

  இந்த சம்பவம் குறித்து கவுல்பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் சுனிதாவின் கணவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். குடும்ப தகராறில் குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்த சம்பவம் பல்லாரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story