இரவில் வெளியே சுற்ற கூடாது என்று கூறியதால் 2 போலீஸ்காரர்கள் மீது காரை ஏற்றி கொல்ல முயற்சி
பெங்களூருவில் இரவில் வெளியே சுற்ற கூடாது என்று கூறியதால் ஆத்திரத்தில், ஏட்டு உள்பட 2 போலீஸ்காரர்களை, வெளிநாட்டை சேர்ந்த 4 பேர் கும்பல் காரை ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் நடந்து உள்ளது.
பெங்களூரு:
ரோந்து சென்ற போலீஸ்காரர்கள்
பெங்களூருவில் கொரோனா பரவலை தடுக்க இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் இரவு நேரங்களில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கே.ஆர்.புரம் போலீஸ் நிலையத்தில் ஏட்டுவாக பணியாற்றும் ஆரீப் பாஷா, போலீஸ்காரர் கிருஷ்ணா ஆகியோர் மோட்டார் சைக்கிளில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது கே.ஆர்.புரம் அருகே வாரணாசி சாலையில் ஒரு கார் நின்றது. உடனடியாக காரின் அருகே சென்று போலீசார் பார்த்தனர். அப்போது காருக்குள் 2 பெண்கள் உள்பட 4 வெளிநாட்டை சேர்ந்தவர்கள் அமர்ந்து இருந்தனர். அப்போது போலீசார் இரவு நேர ஊரடங்கு இருப்பதால் தேவையின்றி வெளியே சுற்ற கூடாது என்று 4 பேரையும் எச்சரித்தனர். அப்போது 3 பேர் ஆரீப் பாஷா, கிருஷ்ணாவிடம் மன்னிப்பு கேட்டனர். மேலும் விரைவில் புறப்பட்டு சென்று விடுவதாக கூறினர்.
கார் ஏற்றி கொல்ல முயற்சி
இதையடுத்து ஆரீப் பாஷாவும், கிருஷ்ணாவும் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்து காரில் வந்த வெளிநாட்டினர், மோட்டார் சைக்கிள் மீது மோதினர். அப்போது சுதாரித்து கொண்ட ஆரீப் பாஷாவும், கிருஷ்ணாவும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பினர்.
இதையடுத்து 4 பேரும் காரில் தப்பி சென்றனர். இந்த நிலையில் இரவில் வெளியே சுற்ற கூடாது என்று கூறியதால் தங்களை கார் ஏற்றி 4 வெளிநாட்டினர் கொல்ல முயன்றதாக ஆரீப் பாஷா, கிருஷ்ணா ஆகியோர் கே.ஆர்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி சென்ற வெளிநாட்டினரை வலைவீசி தேடிவருகின்றனர்.
Related Tags :
Next Story