உழவர் சந்தைகளை திறக்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்திற்கு காய்கறிகளுடன் மனு கொடுக்க வந்த விவசாயிகள்
உழவர் சந்தைகளை திறக்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்திற்கு காய்கறிகளுடன் விவசாயிகள் மனு கொடுக்க வந்தனர்.
சேலம்
சேலம் மாவட்டத்தில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் நேற்று முதல் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. ஏற்கனவே காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் திறக்கப்பட்டநிலையில் நேற்று முதல் சலூன், டீக்கடை, எலக்ட்ரிக்கல், பேன்சி ஸ்டோர், ஹார்டுவேர்ஸ், செல்போன், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் என பல கடைகளும் திறக்கப்பட்டன. ஆனால் உழவர் சந்தைகளை திறந்து காய்கறிகள் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் உழவர் சந்தைகள் முன்பு சாலையோரம் காய்கறிகளை வைத்து வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம், அஸ்தம்பட்டி, தாதகாப்பட்டி, அம்மாபேட்டை உள்பட 11 உழவர் சந்தைகளையும் திறந்து காய்கறிகள் விற்பனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறி, விவசாயிகள் நேற்று கைகளில் காய்கறிகளை எடுத்து வந்து நூதன முறையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் கொத்தமல்லி கட்டு ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டதை ரூ.2-க்கும், கத்தரிக்காய், புடலங்காய், வெண்டை ஆகிய காய்கறிகளையும் குறைவான விலையில் விற்பனை செய்து நூதன முறையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர். கொரோனா குறைந்து வருவதால் உழவர் சந்தைகளை திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உழவர் சந்தையில் விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு மாற்று இடம் ஏற்படுத்தி காய்கறிகளை விற்பனை செய்ய அனுமதி அளித்தால், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விற்பனை செய்ய தயாராக உள்ளதாகவும் மனு கொடுக்க வந்த விவசாயிகள் தெரிவித்தனர். உழவர் சந்தைகள் மூடப்பட்டு உள்ளதால் சேலம் மாவட்டத்தில் தினமும் 60 சதவீதம் காய்கறிகள் விற்பனை ஆகாமல் வீணாகி வருவதாகவும் விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story