சேலத்தில் தினமும் ரூ.8 லட்சம் வரை இழப்பு: பூக்களை விற்பனை செய்ய முடியாமல் குப்பை தொட்டியில் கொட்டும் அவலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டை திறக்க வியாபாரிகள் வலியுறுத்தல்
சேலத்தில் பூக்களை விற்பனை செய்ய முடியாததால் அதை குப்பை தொட்டியில் கொட்டும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால் பூ வியாபாரிகளுக்கு தினமும் ரூ.8 லட்சம் வரை இழப்பு ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர்.
சேலம்
பூ மார்க்கெட்
சேலத்தில் பழைய பஸ் நிலையம் அருகே வ.உசி. பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 300 கடைகள் உள்ளன. மார்க்கெட்டில் பூ வியாபாரம் செய்த வியாபாரிகள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பூ மார்க்கெட்டை தற்காலிகமாக மூடுவதாக மாநகராட்சி நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டது.
இதனால் பூ வியாபாரிகள் பூக்களை விற்பனை செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். கொரோனா ஊரடங்கில் கடந்த வாரம் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சேலம் கடைவீதியில் சாலையோரம் அமர்ந்து பூக்களை வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்.
இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பூக்களை தினமும் வாங்கிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். பூக்கள் விளைச்சல் அதிகமாக இருந்தாலும் அதன் விலை குறைந்ேத காணப்படுகிறது.
குப்பை தொட்டியில்...
சேலம் கடைவீதியில் ஏற்கனவே இருந்த பூ மார்க்கெட் கட்டிடங்களை இடித்து விட்டு அங்கு புதிய கடைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் உள்ள மார்க்கெட் தெருவில் 10-க்கும் மேற்பட்டவர்கள் பூக்களை மொத்த வியாபாரம் செய்து வருகின்றனர். ஆனால் தினமும் பூக்களை வாங்குவதற்கு சில்லரை வியாபாரிகளும், பொதுமக்களும் வராததால் அனைத்து கடைகளிலும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பூக்கள் தேக்கம் அடைந்துள்ளன. குறிப்பாக சம்பங்கி, அரளி, சாமந்தி பூக்கள் விற்பனை ஆகாததால் தினமும் வியாபாரிகள் அந்த பூக்களை குப்பை தொட்டியில் கொட்டும் அவலம் நிலை ஏற்படுகிறது. இதனால் தினமும் ரூ.8 லட்சம் வரை இழப்பு ஏற்படுவதாக பூ வியாபாரிகள் கவலையுடன் தெரிவித்தனர்.
தற்போது சம்பங்கி ஒரு கிலோ ரூ.20-க்கும், அரளி ஒரு கிலோ ரூ.10-க்கும், ரோஸ் ஒரு கிலோ ரூ.30-க்கும், சாமந்தி ஒரு கிலோ ரூ.40-க்கும் விற்பனை செய்யபடுகிறது. ஆனால் பூக்களை வாங்குவதற்கு ஆட்கள் வராததால் விலை கடுமையாக சரிந்து உள்ளதாகவும், குண்டு மல்லி, சன்ன மல்லிக்கு மட்டுமே ஓரளவுக்கு விலை கிடைக்கிறது என்று வியாபாரிகள் கவலையுடன் தெரிவித்தனர்.
வியாபாரிகள் கோரிக்கை
இதுகுறித்து சேலத்தை சேர்ந்த பூ வியாபாரிகள் சிலர் கூறியதாவது:-
கொரோனா பரவல் காரணமாக பழைய பஸ் நிலையத்தில் செயல்பட்டு வந்த பூ மார்க்கெட் தற்காலிமாக மூடப்பட்டுள்ளது. இதனால் பூக்களை விற்பனை செய்ய முடியாமல் வியாபாரிகளாக நாங்கள் பரிதவித்து வருகிறோம். மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலில் இருந்து சம்பங்கி, சாமந்தி, ரோஜா, மல்லிகை, அரளி போன்ற பல்வேறு பூக்களை கொண்டு வருகின்றனர்.
ஆனால் இந்த பூக்களை வாங்குவதற்கு ஆட்கள் இல்லை. அதனால் எங்களுக்கு இழப்பு ஏற்படுவதுடன், பூக்களும் அழுகி விடுவதாலும் அந்த பூக்களை நாங்கள் குப்பை தொட்டியில் வீசுகிறோம். பூ மார்க்கெட் மூடப்பட்டிருப்பதால் மாநகராட்சி நிர்வாகத்திற்கும் தினமும் ஒரு லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது. தற்போது பல்வேறு கடைகளை திறக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. எனவே மீண்டும் வ.உ.சி. பூ மார்க்கெட்டை திறக்க மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story