குப்பைகள் இல்லாத மாவட்டத்தை உருவாக்கும் நோக்கில் - ‘தூய்மை திருவள்ளூர்’ திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர்


குப்பைகள் இல்லாத மாவட்டத்தை உருவாக்கும் நோக்கில் - ‘தூய்மை திருவள்ளூர்’ திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர்
x
தினத்தந்தி 29 Jun 2021 10:27 AM IST (Updated: 29 Jun 2021 10:27 AM IST)
t-max-icont-min-icon

குப்பைகள் இல்லாத மாவட்டத்தை உருவாக்கும் நோக்கில், ‘தூய்மை திருவள்ளூர்’ திட்டத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

திருவள்ளூர்,

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க ‘தூய்மை திருவள்ளூர்' திட்டம் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக பால்வளத் துறை அமைச்சர் நாசர் கலந்துகொண்டு தூய்மை திருவள்ளூர் திட்டத்திற்கான வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது, தூய்மை திருவள்ளூர் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் நகர மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள தேசிய மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய சாலைகளில் கொட்டப்படும் குப்பைகளை அகற்றும் பணி துவக்கி வைக்கப்பட்டது. சாலை ஓரங்களில் குப்பை கொட்டுவதை தடுக்கும் வகையிலும் ஆவடி மாநகராட்சி, 4 நகராட்சிகள், 10 பேரூராட்சிகள் 526 ஊராட்சிகளிலும் முதல் கட்டமாக மாவட்டம் முழுவதும் தூய்மை திருவள்ளூர் வாரமாக 28 -6 -2019 முதல் வருகின்ற 4-ந் தேதி வரை சாலை ஓரங்களில் குப்பைகளை பாதுகாப்பாக அகற்றும் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளிலும் 2,165 பணியாளர்களை கொண்டு வீடுகள் தோறும் குப்பைகளை சேகரித்தல், குப்பைத் தொட்டிகளில் உள்ள குப்பைகள் அப்புறப்படுத்துதல் மற்றும் தெரு ஓரங்களில் உள்ள குப்பைகளை அப்புறப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு பற்றாளர் நியமனம் செய்யப்பட்டு அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கவும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை சிறப்பான முறையில் செயல்படுத்த தூய்மை திருவள்ளூர் இயக்கத்தில் நகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் இணைந்து இப்பணியில் முழு ஈடுபாடுடன் செயல்படுத்தி தூய்மையான திருவள்ளூர் மாவட்டத்தை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.க்கள் வி.ஜி. ராஜேந்திரன், ஆ.கிருஷ்ணசாமி, கோவிந்தராஜன், சந்திரன், கணபதி, ஜோசப் சாமுவேல், துரை சந்திரசேகர் தி.மு.க.வின் திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி பூபதி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story