திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடக்கம்


திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடக்கம்
x
தினத்தந்தி 29 Jun 2021 5:34 PM IST (Updated: 29 Jun 2021 5:34 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடங்கியது.

திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரம் அடைந்து உள்ளது. அதேநேரம் பொதுமக்கள் அதிக அளவில் வருவதால் பெயர் முன்பதிவு செய்யப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தட்டுப்பாடு காரணமாக கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படவில்லை. இதற்கிடையே நேற்று 6 ஆயிரத்து 500 தடுப்பூசிகள் வந்தன.
இதையடுத்து கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று மீண்டும் தொடங்கியது. அதன்படி அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள், சிறப்பு முகாம்கள் என மொத்தம் 33 இடங்களில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதையொட்டி முன்பதிவு செய்தவர்களுக்கு தகவல் தெரிவித்து வரவழைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணி நடந்தது.
இதையொட்டி திண்டுக்கல் மாநகராட்சியில் மேட்டுப்பட்டி, கோபால்நகர், முகமதியாபுரம் உள்பட 4 இடங்களில் முகாம் நடத்தப்பட்டது. இதில் திண்டுக்கல் கோபால்நகரில் நடந்த தடுப்பூசி முகாமுக்கு கலெக்டர் விசாகன் திடீரென வந்து ஆய்வு செய்தார். அப்போது சுகாதாரத்துறையினருக்கு பல்வேறு ஆலோனைகளை வழங்கினார். நேற்று மாவட்டம் முழுவதும் 7 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது குறிப்பிடத்தக்கது. மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 72 ஆயிரத்து 842 பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.


Next Story