பரப்பலாறு அணையை தூர்வாரும் திட்டம்


பரப்பலாறு அணையை தூர்வாரும் திட்டம்
x
தினத்தந்தி 29 Jun 2021 6:28 PM IST (Updated: 29 Jun 2021 6:28 PM IST)
t-max-icont-min-icon

பரப்பலாறு அணையின் கொள்ளளவை அதிகரிக்கும் வகையில் தூர்வாருவது குறித்து கலெக்டர் விசாகன் ஆய்வு செய்தார்.

திண்டுக்கல்:


கலெக்டர் ஆய்வு 

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகாவில் பரப்பலாறு அணை அமைந்து உள்ளது. இந்த அணையை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

 இந்த நிலையில் கலெக்டர் விசாகன் நேற்று பரப்பலாறு அணையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அணையில் இருந்து குளங்களுக்கு தண்ணீர் செல்லும் கால்வாய்களையும் பார்வையிட்டார். 

அதையடுத்து பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் கோபி, உதவி செயற்பொறியாளர் விஜயமூர்த்தி மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-

தூர்வாரும் பணி 

பரப்பலாறு அணையின் மொத்த உயரம் 90 அடி ஆகும். இந்த அணையில் 197.95 மில்லியன் கனஅடி தண்ணீர் தேக்கலாம். ஒட்டன்சத்திரம் நகராட்சி, சுற்றுவட்டார கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக பரப்பலாறு அணை விளங்குகிறது. 

மேலும் ஒட்டன்சத்திரத்தை சுற்றியுள்ள 6 குளங்களுக்கு அணையில் இருந்து தண்ணீர் செல்கிறது. இதேபோல் நங்காஞ்சியாற்று படுகையில் விருப்பாட்சி முதல் ஜவ்வாதுபட்டி வரை அமைந்துள்ள தடுப்பணைகள், ஆழ்துளை கிணறுகளுக்கும் ஆதாரமாக உள்ளது. இந்த அணையின் கொள்ளளவை அதிகரிக்கும் வகையில் தூர்வாரப்பட இருக்கிறது. 

இதற்காக பொதுப்பணி துறை மூலம் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தற்போது தூர்வாரும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது. பரப்பலாறு அணையை தூர்வாரினால் 21 மில்லியன் கனஅடி தண்ணீர் கூடுதலாக சேமிக்க முடியும். இதன்மூலம் விவசாயம், குடிநீருக்கான தேவையை பூர்த்தி செய்யலாம். 

இதனால் விவசாய பரப்பளவு அதிகரித்து விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும். எனவே விரைவில் அணையை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story