நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி சாதனை
நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை படைக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை படைக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
பழங்குடியின மக்கள்
நீலகிரி மாவட்டத்தில் தோடர், கோத்தர், பனியர், இருளர், காட்டுநாயக்கர் உள்பட 6 வகையான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். ஆரம்பத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்த சுகாதார குழுவினர், பழங்குடியினர்கள் வசிக்கும் கிராமங்களுக்கு செல்லும் போது கொரோனா அச்சத்தால் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர்.
தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் காட்டினர். மேலும் தடுப்பூசி செலுத்த வந்தபோது ஓடி ஒளிந்து கொள்ளும் நிலை இருந்தது. இதையடுத்து தன்னார்வலர்கள் மூலம் பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமங்களுக்கு நேரடியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. நடப்பு மாத இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
21 ஆயிரத்து 800 பேர்
நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் மொத்தம் 27 ஆயிரத்து 500 பேர் உள்ளனர். இதில் 18 வயதுக்கு மேல் கர்ப்பிணிகள், தீவிர நோய் உள்ளவர்கள் தவிர 21 ஆயிரத்து 800 பேர் இருக்கின்றனர்.
நேற்று முன்தினம் வரை 21 ஆயிரத்து 500 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு இருந்தது. பழங்குடியின மக்கள் வெளியே வேலைக்கு சென்று இருந்தாலும், அவர்கள் வரும் வரை காத்திருந்து தடுப்பூசி போடப்பட்டது.
இலக்கை எட்டி சாதனை
இந்த நிலையில் நேற்று நீலகிரியில் பழங்குடியின மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை படைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் இந்திய அளவில் அனைத்து பழங்குடியினருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்ட மாவட்டமாக நீலகிரி மாறி இருக்கிறது.
இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறும்போது,
தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் நீலகிரிக்கு வந்தபோது, தேயிலை தொழிலாளர்கள் மற்றும் பழங்குடியின மக்கள் அனைவருக்கும் முன்னுரிமை அடிப்படையில் ஜூன் மாத இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து தேயிலை தொழிலாளர்கள், பழங்குடியின மக்கள் அனைவருக்கும் (100 சதவீதம்) தடுப்பூசி முழுமையாக செலுத்தி இலக்கு நிறைவேற்றப்பட்டு இருக்கிறது என்றார்.
Related Tags :
Next Story