பிளஸ்-2 மாணவி வெட்டிக்கொலை; அண்ணனுக்கு வலைவீச்சு


பிளஸ்-2 மாணவி வெட்டிக்கொலை; அண்ணனுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 29 Jun 2021 10:43 PM IST (Updated: 29 Jun 2021 10:43 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே பிளஸ்-2 மாணவி சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அவரது அண்ணனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஸ்ரீவைகுண்டம்:
நெல்லை அருகே உள்ள தூத்துக்குடி மாவட்ட எல்லையான வசவப்பபுரம் பசும்ெபான் நகரைச் சேர்ந்தவர் சுடலைமுத்து. கூலித்தொழிலாளி. இவரது மனைவி பவானி. இவர்களுக்கு மாலைராஜா (22) என்ற மகனும், கவிதா (17) உள்பட 3 மகள்களும் உண்டு. இதில் கவிதா பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலையில் வீட்டில் கவிதா செல்போனை பார்த்துக் கொண்டு இருந்தார். அப்போது, அங்கு மாலைராஜா வந்தார். அப்போது கவிதாவுக்கும், அவருக்கும் திடீர் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த மாலைராஜா வீட்டில் இருந்த அரிவாளால் கவிதாவை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் அங்கு இருந்து தப்பிச் சென்றுவிட்டார். இதற்கிடையே, கவிதாவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் வீட்டிற்கு ஓடிவந்தனர். அங்கு அவர் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கவிதா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். இந்த கொலைக்கான காரணம் குறித்து முறப்பநாடு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பரபரப்பு தகவல்கள் வெளியாகின. 

பள்ளி மாணவியான கவிதா எப்போதும் செல்ேபானில் கேம் விளையாடுவதுமாகவும், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை பார்த்து கொண்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. எப்போதும் செல்போன் பார்ப்பதை அறிந்த மாலைராஜா தனது தங்கையை கண்டித்துள்ளார். நேற்றும் வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் கவிதா செல்போனை பார்த்துக் கொண்டு இருந்தார். அப்போது, அங்கு வந்த மாலைராஜா தனது தங்கையை கண்டித்தார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த மாலைராஜா வீட்டில் இருந்த அரிவாளால் தங்கை என்றும் பாராமல் கவிதாவின் கை, வாய் உள்ளிட்ட 25 இடங்களில் சரமாரியாக வெட்டி கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

எனினும் கொலைக்கு இதுதான் காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணம் உண்டா? என்ற கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய மாலைராஜாவை வலைவீசி தேடிவருகிறார்கள்.  நெல்லை அருகே பிளஸ்-2 மாணவியை அவரது அண்ணன் சரமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story