40 அடி உயர பாலத்தில் இருந்து கவிழ்ந்த கார் வீட்டின் மீது விழுந்தது


40 அடி உயர பாலத்தில் இருந்து கவிழ்ந்த கார் வீட்டின் மீது விழுந்தது
x
தினத்தந்தி 29 Jun 2021 11:45 PM IST (Updated: 29 Jun 2021 11:45 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி அருகே 40 அடி உயர பாலத்தில் இருந்து கவிழ்ந்த கார், கீழே இருந்த வீட்டின் மீது விழுந்தது. இதில் ஒருவர் பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே 40 அடி உயர பாலத்தில் இருந்து கவிழ்ந்த கார், கீழே இருந்த வீட்டின் மீது விழுந்தது. இதில் ஒருவர் பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தனியார் நிறுவன உரிமையாளர்

கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (வயது 34). இவர், விளம்பர நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். 

இவரது நண்பர்கள் கோவையை சேர்ந்த கவுசிக் (26), கார்த்திக் கண்ணன் (26). பொள்ளாச்சியை சேர்ந்த கோபிநாத் (26). ஸ்ரீகாந்த் தனது நண்பர்களுடன், தொழில் தொடர்பாக பொள்ளாச்சிக்கு வந்தார். அவர் நண்பர்களுடன் அங்குள்ள விடுதியில் அறை எடுத்து தங்கினார். 

பாலத்தின் தடுப்புச்சுவரை தாண்டியது

இந்த நிலையில் வெளியே சென்று வரலாம் என்றுக்கூறி அவர்கள் 4 பேரும் காரில் ஆர்.பொன்னாபுரத்துக்கு சென்றனர். காரை ஸ்ரீகாந்த் ஓட்டினார். பிறகு அவர்கள் 4 பேரும் மீண்டும் பொள்ளாச்சி திரும்பினார்கள். 

அவர்கள் வந்த கார் வடக்கிபாளையம் பிரிவு ஆ.சங்கம்பாளையம் ரெயில்வே மேம்பாலம் பகுதியில் நள்ளிரவு 2 மணிக்கு வந்தது.  அப்போது திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. 

பிறகு அந்த கார் பாலத்தின் தடுப்புச்சுவரை தாண்டி, 40 அடி பள்ளத்துக்குள் கவிழ்ந்து விழுந்தது.

ஒருவர் பலி; 3 பேர் படுகாயம் 

இதில், பாலத்தின் கீழ் பகுதியில் மின்கம்பிகள் சென்றதால் அந்த மின் கம்பிகளின் மீது கார் உரசியது. இதில் அந்த மின்கம்பம் துண்டாக முறிந்தது.

 இதையடுத்து அந்த கார், அங்கிருந்த ஓய்வு பெற்ற ஆசிரியரான சண்முக சுந்தரம் என்பவரின் வீட்டின் முன் பகுதி கூரை மீது விழுந்தது. 

கார் மோதிய விபத்தில் என்ஜின் மட்டும் தனியாக கழன்று விழுந்தது. இதில் கார் அப்பளம் போல நொறுங்கியது. உடைந்த காரின் மற்றொரு பகுதி, வீட்டு காம்பவுண்டுக்குள் விழுந்தது.

இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த ஸ்ரீகாந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கவுசிக், கார்த்திக் கண்ணன், கோபிநாத் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

போலீசார் விசாரணை

இதற்கிடையில் சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து வெளியே வந்து பார்த்தனர். அப்போது, வீட்டு முன்பு கார் ஒன்று விழுந்து நொறுங்கி கிடந்தது. 

இது குறித்த தகவலின்பேரில் பொள்ளாச்சி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அவர்கள் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு தனியார் ஆஸ்பத்தி ரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

மேலும் காருக்குள் இருந்த ஸ்ரீகாந்த் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.காரில் வந்த போது ஸ்ரீகாந்த் தவிர மற்ற அனைவரும் சீட் பெல்ட் அணிந்து இருந்தனர். 

இதனால் அவர்கள் 3 பேரும் காயங்களுடன் உயிர் தப்பியது விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 


Next Story