தமிழகத்தில் எந்த காலகட்டத்திலும் ‘நீட்’ தேர்வை நுழைய விடமாட்டோம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
தமிழகத்தில் எந்த கால கட்டத்திலும் ‘நீட்’ தேர்வை நுழைய விடமாட்டோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
ஸ்ரீரங்கம்,
தமிழகத்தில் எந்த கால கட்டத்திலும் ‘நீட்’ தேர்வை நுழைய விடமாட்டோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
அமைச்சர் ஆய்வு
திருச்சி ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு இலவச பாட புத்தகங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று வழங்கினார். பின்னர் பள்ளியில் ஆய்வகங்கள், வகுப்பறைகள் மற்றும் மாணவிகள் பயன்படுத்தக் கூடிய கழிப்பறை உள்ளிட்டவைகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜூலை 31-ந் தேதிக்குள் பிளஸ்-2 மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால் அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பிளஸ்-2 தனித்தேர்வர்கள் 30 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் தேர்வு நடைபெறும்.
‘நீட்’ தேர்வு
தற்போது பிளஸ்-2 மாணவர்களின் மதிப்பெண் குறைவாக இருந்தால் கூட அந்த தனித்தேர்வுகளிலும் மாணவர்கள் தேர்வு எழுதலாம். அது கொரோனா கட்டுப்பாடு தளர்வுகள் இருந்தால் மட்டுமே சாத்தியம். இல்லையென்றால் அந்த நேரத்தில் அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை எடுக்கிறதோ அதன்படி செயல்படும்.
தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலைமையை நினைத்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஆசிரியராக இருந்தவர்கள் பேக்கரிகளிலும், பெயிண்டராக வேலை செய்யும் வீடியோ பதிவையும் எனக்கு அனுப்பி வருகின்றனர். மிகவும் வருத்தமாக இருக்கிறது.
நிச்சயமாக தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை காப்பதற்கு முதல்-அமைச்சரிடம் இதுகுறித்து பேச உள்ளேன். தமிழகத்தில் எந்த காலகட்டத்திலும் ‘நீட்’ தேர்வை நுழைய விடமாட்டோம். அதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருவோம்
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
பூமி பூஜை
மேலும் துறையூர், உப்பிலியபுரம் பகுதிகளிலும் அமைச்சர் பல்வேறு பள்ளிகளை ஆய்வு செய்தார். அப்போது துறையூரில் உள்ள மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு செய்து அங்கு மாணவிகளுக்கு கட்டப்பட்டிருந்த ஆய்வகத்தை திறந்து வைத்து மாணவிகளுக்கு இலவச புத்தகங்களை வழங்கினார்.
மேலும் திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் அரசு உயர்நிலைப்பள்ளியில் நூலகம் மற்றும் ஓவிய அறை கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் 2 மேல்நிலை குடிநீர் தொட்டிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார். துவாக்குடி பகுதியில் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட 9 குடும்பங்களுக்கு தனது சொந்த நிதியில் தலா ரூ.10 ஆயிரம் மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பள்ளிதலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story