உடுமலையில் 2 மாதங்களுக்கு பிறகு நேதாஜி விளையாட்டு மைதானம் திறக்கப்பட்டது
உடுமலையில் 2 மாதங்களுக்கு பிறகு நேதாஜி விளையாட்டு மைதானம் திறக்கப்பட்டது
உடுமலை:
உடுமலையில் 2 மாதங்களுக்கு பிறகு நேதாஜி விளையாட்டு மைதானம் திறக்கப்பட்டது. அதனால் நடைபயிற்சி செல்லும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விளையாட்டு மைதானம்
உடுமலை கல்பனா சாலையில் நேதாஜி விளையாட்டு மைதானம் உள்ளது. உடுமலை தளி சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நிர்வாகத்தின் கீழ் உள்ள இந்த விளையாட்டு மைதானத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் 400-க்கும் மேற்பட்டவர்கள் நடைபயிற்சி மேற்கொள்வார்கள்.
அத்துடன் விளையாட்டு வீரர்கள் ஆக்கி, கூடைபந்து, இறகுபந்து, கிரிக்கெட், கபடி உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடுவார்கள். சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் விளையாடுவதற்கு அதிக அளவில் வருவார்கள். அத்துடன் விளையாட்டு போட்டிகளும் நடப்பதுண்டு.
திறப்பு
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவலின் 2-வது அலை வீசி வருவதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி உடுமலை நேதாஜி விளையாட்டு மைதானம் கடந்த ஏப்ரல் மாதம் 26-ந்தேதி பூட்டப்பட்டது.
அதனால் நடைபயிற்சி செல்வோர் சிலர் சாலை பகுதிகளில் நடைபயிற்சி சென்று வந்தனர். பலர் நடைபயிற்சி செல்ல முடியாமல் போனது. விளையாட்டு வீரர்களும் தவிப்பிற்குள்ளாயினர்.
இந்த நிலையில் முழு ஊரடங்கில் அளிக்கப்பட்ட கூடுதல் தளர்வுகளின்படி உடுமலையில் நேதாஜி விளையாட்டு மைதானம், 2 மாதங்களுக்கு பிறகு நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. நடைபயிற்சி செல்லும் பாதை சுத்தம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் நேற்று நடைபயிற்சி மேற்கொண்டனர்.
புதர்
இந்த மைதானம் திறக்கப்படாத நிலையில், மைதானத்தின் வடக்கு பகுதியில் எப்போதும் சிறிது ஈரப்பதம் உள்ள பகுதியான கூடைபந்து மற்றும் ஸ்கேட்டிங் பயிற்சி தளம் ஆகியவற்றை சுற்றியுள்ள இடங்களிலும், உடற்பயிற்சி உபகரணங்கள் உள்ள பகுதி உள்ளிட்ட இடங்களிலும் புல்செடிகள் புதர் போன்று வளர்ந்துள்ளன. அதனால் மைதானத்திற்குள் வடக்கு பகுதியில் விளையாடும் விளையாட்டு வீரர்கள், உடற்பயிற்சி மேற்கொள்கிறவர்கள் ஆகியோர் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
Related Tags :
Next Story