அத்துமீறும் ஆம்புலன்சுகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை


அத்துமீறும் ஆம்புலன்சுகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 30 Jun 2021 12:33 AM IST (Updated: 30 Jun 2021 12:33 AM IST)
t-max-icont-min-icon

அத்துமீறும் ஆம்புலன்சுகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

போடிப்பட்டி
அத்துமீறும் ஆம்புலன்சுகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தனி மரியாதை
ஆம்புலன்ஸ்  சைரன் சத்தம் கேட்டவுடன் அனைத்து வாகனங்களும் வழி விட்டு ஒதுங்கி நிற்கும். போக்குவரத்து போலீசார் மற்ற வாகனங்களை நிறுத்தி ஆம்புலன்சுக்கு வழி ஏற்படுத்திக் கொடுப்பார்கள். நமது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒரு ஆம்புலன்ஸ் வாகனத்துக்காக தன் காரை நிறுத்தி வழி விட்டிருக்கிறார். ஒரு உயிரை காப்பதற்காக விரைந்து செல்லும் வாகனம் என்ற வகையில் ஆம்புலன்சுக்கு எல்லா இடங்களிலும் தனி
மரியாதை உண்டு.
தற்போதுள்ள கொரோனா பெருந்தொற்றுக்காலத்தில் தன் உயிரைப் பணயம் வைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் எந்த அளவுக்கு பணியாற்றுகிறார்களோ அதேபோல ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் உதவியாளர்கள் பணியும் போற்றப்பட வேண்டியது. நோய்த்தொற்று பயத்தால் உறவினர்கள் கூட விலகியிருக்கும் நிலையில் இவர்கள் தான் களப்பணியாற்றுகிறார்கள். அதுபோல விபத்தில் சிக்கியவர்களுக்கு ஒவ்வொரு நொடியும் முக்கியமானது என்ற வகையில் மின்னல் வேகத்தில் செயல்படும் ஆம்புலன்சுகளால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.
தொழில் போட்டி
ஆனால் சமீப காலங்களாக ஒரு சிலர் செய்யும் தவறுகள் மொத்த ஆம்புலன்ஸ் ஓட்டிகளின் தியாகத்தை கொச்சைப்படுத்துவதாக மாறி வருகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
சமீப காலங்களாக ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களிடையே தொழில் போட்டி உருவாகி வருகிறது. இதனால் ஒரு விபத்து நடக்கும்போது யார் முதலில் அந்த இடத்தை சென்றடைகிறார்களோ அவரே அந்த நோயாளியை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பது அவர்களுக்குள் எழுதப்படாத ஒப்பந்தமாக உள்ளது.
இதனால் ஒரு சில ஆம்புலன்ஸ் டிரைவர்கள் வண்டியை கண்மூடித்தனமாக அதிக வேகத்தில் இயக்குகின்றனர். இதனால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே உயிர் காக்கும் பணிக்காக செல்லும் போதும் கண்டிப்பாக கட்டுப்பாடான வேகத்திலேயே வாகனங்களை இயக்க வேண்டும்.
சமூக விரோத செயல்
பொதுவாக ஆம்புலன்ஸ் வாகனங்களை சோதனையிடுவதில்லை என்ற அடிப்படையில் ஒருசிலர் அதன் மூலம் சமூக விரோத செயல்களிலும் ஈடுபடுகின்றனர். அந்தவகையில் ஆம்புலன்சில் போதை வஸ்துக்களை கடத்திச் செல்வது, குற்றவாளிகள் தப்பி செல்ல பயன்படுத்துவது போன்ற சம்பவங்களும் நடந்துள்ளது.
அந்தவகையில் குமரலிங்கம் பகுதியில் ஆம்புலன்ஸ் மூலம் மது வகைகளை கடத்தியவர்கள் சிக்கியுள்ளனர். போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது சந்தேகத்தின் பேரில் ஆம்புலன்சை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர். பழனி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுத்திரும்பும் நோயாளியை அழைத்து வருவதாக டிரைவர் தெரிவித்துள்ளார். ஆனால் ஆம்புலன்சில் நோயாளியுடன் 65 மது பாட்டில்களும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பாப்பம்பட்டியிலிருந்து மதுபாட்டில்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பதற்காக கொண்டு வந்ததும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அந்த ஆம்புலன்சின் உரிமையாளரான குறிச்சிக்கோட்டையைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 30), டிரைவர் தேவராஜ் (23) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த குமரலிங்கம் போலீசார் அவர்களிடமிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
குற்றங்களை  தடுக்க...
ஆம்புலன்ஸ் ஓட்டிகளின் இதுபோன்ற தவறான செயல்கள் ஒட்டுமொத்த ஆம்புலன்சுகளையும் சோதனையிடும் நிலையை உருவாக்கினால் உயிரிழப்புகளுக்குக் காரணமாகி விடும். 
எனவே சக ஆம்புலன்ஸ் ஓட்டுனரோ, உரிமையாளரோ தவறு செய்வது தெரிய வந்தால் உடனடியாக மற்றவர்கள் போலீசாருக்கு தெரியப்படுத்த வேண்டும். அத்துடன் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அதிக பட்ச தண்டனை வழங்குவதன் மூலமே குற்றங்களைத் தடுக்க முடியும். இவ்வாறு  அவர்கள் கூறினர்.

Next Story