குமரியில் ரேஷன் கடைகளை அடைத்து ஊழியர்கள் திடீர் போராட்டம்
குமரியில் ரேஷன் கடைகளை அடைத்து ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண் ஊழியர் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து இந்த போராட்டம் நடந்தது.
நாகர்கோவில்:
குமரியில் ரேஷன் கடைகளை அடைத்து ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண் ஊழியர் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து இந்த போராட்டம் நடந்தது.
பெண் ஊழியர் மீது தாக்குதல்
கருங்கல் அருகே மத்திகோடு பகுதியில் உள்ள ஒரு ரேஷன் கடையில் பெண் ஊழியர் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று அவர் கடையில் இருந்த போது சிலர் அங்கு வந்து தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக கூறி தகராறு செய்து தாக்கியதாக தெரிகிறது. இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு குமரி மாவட்ட ரேஷன் கடை ஊழியர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் பெண் ஊழியர் தாக்கப்பட்டதை கண்டித்தும், தாக்குதலை நடத்திய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ரேஷன் கடை ஊழியர்கள் நேற்று கடை அடைப்பு போராட்டம் நடத்தினர்.
குமரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கத்தின் கீழ் 440 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 324 ரேஷன் கடைகள் நேற்று அடைக்கப்பட்டன. இதனால் பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
ஆலோசனை கூட்டம்
முன்னதாக கடை அடைப்பு தொடர்பாக தமிழ்நாடு பொது வினியோக ஊழியர் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் குமரி செல்வன் தலைமையில் இந்துக்கல்லூரி அனாதை மடத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் நிர்வாகிகள் ஜெகன் மகேஷ், அருண் ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story