கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தஞ்சை மாவட்ட மீனவர்கள் ஆயத்தம்
தடைகாலத்துக்கு பிறகு முதன் முறையாக கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தஞ்சை மாவட்ட மீனவர்கள் நேற்று ஆயத்தமாயினர்.
சேதுபாவாசத்திரம்;
தடைகாலத்துக்கு பிறகு முதன் முறையாக கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தஞ்சை மாவட்ட மீனவர்கள் நேற்று ஆயத்தமாயினர்.
மீன்களின் இனப்பெருக்க காலம்
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம் ஆகிய இடங்களில் 246 விசைப்படகுகள் மூலமாக மீன்பிடி தொழில் நடைபெற்று வந்தது. கடந்த 2018-ம் ஆண்டு வீசிய கஜா புயலில் 188 படகுகள் சேதம் அடைந்தன.
தற்போது இந்த பகுதியில் 146 விசைப்படகுகள் மூலமாக மட்டுமே மீன்பிடி தொழில் நடைபெற்று வருகிறது. மீன்களின் இனப்பெருக்க காலத்தையொட்டி ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் ஜூன் மாதம் 15-ந் தேதி வரை 61 நாட்களுக்கு விசைப்படகுகள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க அரசு தடை விதித்து வருகிறது. வழக்கம்போல் இந்த ஆண்டும் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டு கடந்த 15-ந் தேதியுடன் நிறைவடைந்தது.
மீனவர்கள் ஆயத்தம்
வழக்கமாக தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் தடைகாலம் முடிவடைந்த உடனேயே கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டு செல்வார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா 2-ம் அலையின் தாக்கம், ஊரடங்கு கட்டுப்பாடுகள் உள்ளிட்ட காரணங்களால் தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் தடைகாலம் முடிவடைந்த உடன் மீன்பிடிக்க செல்லவில்லை. இந்த மாதம் (ஜூன்) 30-ந் தேதி (அதாவது இன்று) முதல் மீன்பிடிக்க செல்ல விசைப்படகு மீனவர்கள் முடிவு செய்து இருந்தனர். அதன்படி தடைகாலத்துக்கு பிறகு முதன் முறையாக இன்று (புதன்கிழமை) முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல உள்ளனர். இதற்காக மீனவர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே ஆயத்தமாயினர்.
படகுகளுக்கு தேவையான டீசல் நிரப்பும் பணி, மீன்பிடி உபகரணங்களை படகுகளில் ஏற்றுதல் போன்ற பணிகளிலும் மீனவர்கள் ஈடுபட்டனர். கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் கொரோனா நோய் தொற்று காரணமாக 75 நாட்களுக்கு பிறகு விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story