கர்நாடகத்தில் திட்டமிட்டபடி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடக்கும் - எடியூரப்பா அறிவிப்பு
கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தேதி தன்னிச்சையாக முடிவு செய்ததாக சுகாதாரம்-பள்ளிக்கல்வித் துறை மந்திரிகள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் திட்டமிட்டப்படி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடக்கும் என முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.
பெங்களூரு:
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு
கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை காரணமாக நடப்பு கல்வி ஆண்டில் இதுவரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால் ஆன்-லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நடத்துவதா? வேண்டாமா? என கருத்துக்கள் மாவட்டந்தோறும் மாணவர்கள், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு வந்தது.
இந்த கருத்து கேட்பு கூட்டம் நிறைவடைந்ததை தொடர்ந்து பள்ளி கல்வித் துறை அதிகாரிகளுடன் பள்ளிக் கல்வித் துறை மந்திரி சுரேஷ்குமார் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்திற்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த மந்திரி சுரேஷ்குமார், கர்நாடகத்தில் ஜூலை 19 மற்றும் 22-ந்தேதிகளில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நடைபெறும் என்று அறிவித்தார்.
மந்திரிகள் இடையே ேமாதல்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒரு வகுப்பறையில் ஒரு பெஞ்சுக்கு ஒரு மாணவர் வீதம் 12 பேர் மட்டுமே அமர வைக்கப்படுவார்கள் என்றும் கூறினார். மேலும் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளுடன் இந்த தேர்வு நடத்த ஏற்பாடுகள் செய்திருப்பதாகவும் அவர் கூறினார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த கர்நாடக சுகாதாரத்துறை மந்திரியான தன்னிடம் கலந்து ஆலோசிக்கவில்லை என்று சுதாகர் குற்றம்சாட்டி கூறியுள்ளார்.
இதனால் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடர்பாக பள்ளி கல்வித்துறை, சுகாதாரத்துறை மந்திரிகள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதன் காரணமாக கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு திட்டமிட்டப்படி நடைபெறுமா என்ற கேள்விக்குறி எழுந்தது.
எடியூரப்பா அறிவிப்பு
இந்த நிலையில் முதல்-மந்திரி எடியூரப்பா, கர்நாடகத்தில் திட்டமிட்டப்படி ஜூலை 19, 22-ந்தேதிகளில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எடியூரப்பா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-
திட்டமிட்டப்படி தேர்வு நடக்கும்
பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தேதியை அறிவிப்பதற்கு முன்பு என்னிடம் கலந்து ஆலோசனை நடத்தினார். அவர் தன்னிச்சையாக முடிவு எடுக்கவில்லை.
இதுகுறித்து முழுமையாக கலந்து ஆலோசனை நடத்திய பிறகு மாணவர்களின் நலன் கருதி தேர்வு தேதி முடிவு செய்யப்பட்டது. அதனால் இந்த விஷயத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவது தேவையற்றது. திட்டமிட்டப்படி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நடைபெறும்.
இறுதி முடிவு
கொரோனா 2-வது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் கர்நாடகத்தில் வணிகவளாகங்கள், மால்களை திறக்க ஆலோசனை நடத்தி வருகிறோம். இதுபற்றி மால்கள், வணிக வளாகங்களை திறக்க உரிமையாளர்கள் என்னை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர். ஜூலை 5-ந்தேதிக்கு பிறகு இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் எடியூரப்பா குறிப்பிட்டுள்ளார்.
Related Tags :
Next Story