பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் மொபட்டுக்கு பாடை கட்டி ஒப்பாரி வைத்து நூதன போராட்டம் சேலத்தில் பரபரப்பு


பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் மொபட்டுக்கு பாடை கட்டி ஒப்பாரி வைத்து நூதன போராட்டம் சேலத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 30 Jun 2021 3:25 AM IST (Updated: 30 Jun 2021 3:25 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மொபட்டுக்கு பாடை கட்டி ஒப்பாரி வைத்து நூதன போராட்டம் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்.
ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் பல மாவட்டங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100-ஐ தாண்டியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.  இந்தநிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், கொரோனா கால நிவாரணமாக மத்திய அரசு சார்பில் குடும்பத்தினருக்கு ரூ.7,500 நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆகியவை சார்பில் சேலம் 5 ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்நது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநகர செயலாளர் பிரவீன்குமார் தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட பொருளாளர் காஜாமொய்தீன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநகர தலைவர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் மீதான வரிகளை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பெண்கள் ஒப்பாரி வைத்தனர்
அப்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பாடை கட்டி கொண்டு வந்தனர். அதில் மொபட்டை  ஒன்றை கிடத்தி வெள்ளை துணியால் மூடி வைத்தனர். அதற்கு தேங்காய், பழம் வைத்து படைத்து ஊதுபத்தி காட்டியதுடன் அதன் மீது பூக்கள் தூவப்பட்டது. தொடர்ந்து பெண்கள் மொபட்டை சுற்றி வந்து ஒப்பாரி வைத்தனர். கட்சி நிர்வாகி ஒருவர் கொள்ளிக்குடம் தூக்கி வந்தார்.
நடுரோட்டில் நடந்த இந்த போராட்டம் அந்த பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வழியாக சாலையில் சென்றவர்கள் நூதன போராட்டத்தை வினோதமாக பார்த்தனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தையொட்டி அங்கு பள்ளப்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆட்டையாம்பட்டி
ஆட்டையாம்பட்டி பாரத ஸ்டேட் வங்கி முன்பு வீரபாண்டி ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். விவசாய சங்க மாவட்ட தலைவர் கோபி, லட்சுமணன், பாலையா, பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பெட்ரோல்- டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
ஓமலூர் அடுத்த தீவட்டிப்பட்டியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா குழு உறுப்பினர் தங்கராஜ் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் கண்ணையன், விடுதலை சிறுத்தை கட்சியின் சேலம் நாடாளுமன்ற தொகுதி நிர்வாகி ஆறுமுகம், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செய்தி தொடர்பாளர் அர்சுனன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மோகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் அரியா கவுண்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேச்சேரி
மேச்சேரி பஸ் நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் மணிமுத்து தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் காந்தமுத்து, முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் தங்கவேலு, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர்கள் ஜனார்த்தனன், கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் ஜலகண்டாபுரம் பஸ் நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் கோகுலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, மோட்டார் சைக்கிளுக்கு மாலை அணிவித்தும், விறகு அடுப்பில் சமைத்தும் நூதன போராட்டம் நடத்தினர்.


Next Story