மெரினா கடற்கரையில் மின்கம்பத்தில் ஏறிய போதை வாலிபரால் பரபரப்பு


மெரினா கடற்கரையில் மின்கம்பத்தில் ஏறிய போதை வாலிபரால் பரபரப்பு
x
தினத்தந்தி 30 Jun 2021 10:55 AM IST (Updated: 30 Jun 2021 10:55 AM IST)
t-max-icont-min-icon

மெரினா கடற்கரையில் மின்கம்பத்தில் ஏறிய போதை வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. 2 மணி நேர போரட்டத்துக்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அவரை பத்திரமாக மீட்டனர்.

சென்னை,

சென்னை மெரினா கடற்கரை சாலையில் நேற்று வழக்கம் போல வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது மாலை 6 மணி அளவில் வாலிபர் ஒருவர் அங்கிருந்த உயரமான மின்கம்பத்தில் ஏறினார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதியில் சென்று கொண்டிருந்தவர்கள், அவர் ஏன் மின்கம்பத்தில் ஏறுகிறார் என தெரியாமல் குழம்பினர்.

கம்பத்தின் உச்சிக்கு சென்ற அந்த வாலிபர், அங்கு உட்கார்ந்து கொண்டார். வெகுநேரமாக உட்கார்ந்திருந்த அந்த வாலிபரை கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து வந்த மெரினா போலீசார், அந்த வாலிபரை கீழே இறங்கும் படி கூறினர். ஆனால் அவர் இறங்கியபாடு இல்லை. இதையடுத்து போலீசார் தீயணைப்புதுறைக்கு தகவல் கொடுத்தனர்.

விரைந்து வந்த திருவல்லிகேணி தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் எழும்பூர் தீயணைப்பு வீரர்களும் ‘ஸ்கை லிப்ட்’ வாகனம் மூலம் அந்த வாலிபரை கீழே இறக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராட்டத்துக்கு பிறகு அவரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக கீழே இறக்கி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வாலிபர் கஞ்சா போதையில் மின் கம்பத்தில் ஏறியது தெரியவந்தது. போதையில் இருந்ததால், வாலிபரின் பெயர் மற்றும் முகவரியை போலீசாரால் பெறமுடியவில்லை.

இதைத்தொர்ந்து, அவரை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போதை வாலிபரிடன் அட்டகாசத்தால், அந்த பகுதியில் நேற்று பரப்பரப்பை ஏற்படுத்தியது.

Next Story