சைதாப்பேட்டை சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டன் புழல் சிறைக்கு மாற்றம்
ஏ.சி. வசதியுடன் கூடிய அறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததாக வந்த தகவல் படி சைதாப்பேட்டை கிளைச்சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் மணிகண்டன் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
ஆலந்தூர்,
நடிகை சாந்தினியை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாக அளித்த புகாரில் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் மணிகண்டன் மீது அடையாறு அனைத்து மகளிர் போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில், தலைமறைவாக இருந்த மணிகண்டன் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, பெங்களூரூ பண்ணை வீட்டில் பதுங்கி இருந்த போது கடந்த 20-ந் தேதி தனிப்படை போலீசார் அவரை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.
அவரிடம் இருந்து செல்போனை ஆய்வு செய்தபோது, நடிகையுடன் அந்தரங்கமாக இருந்தற்கான ஏராளமான ஆதாரங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவரை சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்திய நிலையில், வருகிற ஜூலை 2-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் சைதாப்பேட்டை கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் சிறையில் மணிகண்டன் தங்கியிருந்த அறையில் ஏ.சி.வசதியுடன் கூடிய சொகுசு வசதி செய்து கொடுக்கப்பட்டு அவர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக சிறைத்துறையில் உள்ள உளவுப்பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது.
அதைத்தொடர்ந்து சிறைத்துறை விஜிலென்சு அதிகாரிகள் நேற்று காலையில் சைதாப்பேட்டை கிளைச்சிறையில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் மணிகண்டன் தங்கியிருந்த அறையில் ஏர்கூலர் எந்திரம், சொகுசு மெத்தைகள், தலையணைகள், வாசனை திரவியங்கள் இருந்தன.
மேலும் சிறையில் இருந்தபடி வெளியில் நடப்பவற்றை தெரிந்து கொள்ள செல்போன் பயன்படுத்தியதாக தெரிகிறது. அந்த செல்போனுக்கு அவரது அறையிலேயே சார்ஜரும் இருந்தது.
இதனால் அவர் வீட்டில் இருப்பது போன்று சொகுசு வாழ்க்கை சைதாப்பேட்டை கிளைச்சிறையிலும் அனுபவிப்பது கண்டுபிடிக்கப்பட்டு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அதன் பேரில், அவர் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். ஆனால் கொரோனா விதிமுறைகளின் அடிப்படையில் கிளைச் சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் சைதாப்பேட்டை கிளைச்சிறையில் சொகுசு வசதிகள் செய்யப்பட்டதா? என்பது குறித்தும் விசாரிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை 5 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோரி சைதாப்பேட்டை பெருநகர 9-வது கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
மனு மீதான விசாரணை மாஜிஸ்திரேட்டு மோகனாம்பாள் முன்னிலையில் வந்தது. அப்போது மாஜிஸ்திரேட்டிடம் போலீஸ் காவலில் செல்ல விருப்பம் இல்லை என முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தெரிவித்தார்.
2 தரப்பு வாதங்களை கேட்ட மாஜிஸ்திரேட்டு மோகனாம்பாள் மணிகண்டனை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து முன்னாள் அமைச்சர் மணிகண்டனை புழல் சிறையில் அடைக்க போலீசார் அழைத்து சென்றனர்.
Related Tags :
Next Story