அண்ணாநகரில் டீ கப் வடிவிலான சமுதாய கிணற்றில் அதிகாரிகள் ஆய்வு


அண்ணாநகரில் டீ கப் வடிவிலான சமுதாய கிணற்றில் அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 30 Jun 2021 7:11 PM IST (Updated: 30 Jun 2021 7:11 PM IST)
t-max-icont-min-icon

பருவமழை காலத்தையொட்டி முன்எச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை அண்ணாநகரில் டீ கப் வடிவிலான சமுதாய கிணற்றில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

சென்னை,

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தையொட்டி, சென்னையில் உள்ள பராமரிக்கப்படாத கிணறுகள் தூர்வாரப்பட்டன. அதேவேளை பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களின்கீழ் சென்னையில் உள்ள பழமையான நீர்நிலைகள் மற்றும் சமுதாய கிணறுகள் தூர்வாரப்பட்டன. பொதுமக்கள் கவனம் ஈர்க்கும் வகையில் தூர்வாரப்பட்ட இந்த சமுதாய கிணறுகள் டீ கப், தர்பூசணி, பூக்கூடை, கப்பல் உள்ளிட்ட வடிவங்களில் அமைக்கப்பட்டன. இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் மிகுந்த வரவேற்பு அளித்தனர்.

இந்த சமுதாய கிணறுகள் அந்தந்த மாநகராட்சி எல்லைக்குட்பட்ட மண்டல சுகாதாரத்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த கிணறுகளில் குப்பைகள் வீசப்படாத வகையில் பராமரிப்பு பணியும் முன்னெடுக்கப்பட்டது. மாநகராட்சியின் நடவடிக்கையால் புத்துயிர் பெற்ற இந்த நவீன வடிவமைப்புடன் கூடிய சமுதாய கிணறுகள் பெரிதும் கவனத்தை ஈர்த்து வந்தது.

அதிகாரிகள் ஆய்வு

தற்போது பருவமழை காலம் தொடங்கியுள்ள நிலையில் சென்னையில் ஆங்காங்கே மழை பெய்து கொண்டிருக்கிறது. வரும் நாட்களில் மழையின் தீவிரம் இன்னும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதால் நீர்நிலைகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வை மேற்கொள்ள மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது. குறிப்பாக சமுதாய கிணறுகளின் செயல்பாடுகளை கண்காணிக்குமாறும் அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது.

அதன்படி சமுதாய கிணறுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை அண்ணாநகரில் உள்ள டீ கப் வடிவிலான சமுதாய கிணற்றில் நேற்று மாநகராட்சி மண்டல அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். மழைநீர் செல்லும் கட்டமைப்புகள் சரியாக உள்ளதா?, மழைநீர் தங்கு தடையின்றி செல்வது உள்ளிட்ட பல்வேறு வகையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

உத்தரவு

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘சமுதாய கிணறு களில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். மழைக்காலத்தில் பொதுமக்கள் சிரமங்களை தவிர்க்கும் வகையிலும், குடிநீர் தட்டுப்பாடு நிலவாத வகையிலும் தேவையான ஏற்பாடுகளை செய்யக்கோரி எங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி தொடர் ஆய்வில் ஈடுபட்டு வருகிறோம்’’ என்றனர்.

Next Story