கோட்டக்குப்பம் அருகே தேங்காய் நாா் கம்பெனிக்கு தீ வைப்பு
கோட்டக்குப்பம் அருகே தேங்காய் நாா் கம்பெனிக்கு தீ வைத்த மா்மநபா்களை போலீசாா் வலைவீசி தேடி வருகின்றனா்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா கோட்டக்குப்பத்தை அடுத்த கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 48). இவர் அதே பகுதியில் தேங்காய் நார் கம்பெனி நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று அதிகாலை யாரோ மர்ம நபர்கள், முகத்தில் துணியை கட்டிக்கொண்டு அந்த கம்பெனியின் உள்ளே புகுந்து அக்கம்பெனிக்கு தீ வைத்ததோடு அங்குள்ள வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினி லாரிக்கும் தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.
இதில் மளமளவென தீ பரவி, தேங்காய் நார் கம்பெனி முழுவதும் கொழுந்து விட்டு எரியத்தொடங்கியது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் வானூர் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் அக்கம்பெனி முழுவதும் தீயில் எரிந்து சேதமடைந்தது. இதன் சேத மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சிவக்குமார் கொடுத்த புகாரின்பேரில் கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story