வல்லநாடு அருகே பிளஸ்-2 மாணவியை கொன்ற அண்ணன் கைது


வல்லநாடு அருகே  பிளஸ்-2 மாணவியை கொன்ற அண்ணன் கைது
x
தினத்தந்தி 30 Jun 2021 9:34 PM IST (Updated: 30 Jun 2021 9:34 PM IST)
t-max-icont-min-icon

வல்லநாடு அருகே பிளஸ்-2 மாணவியை கொன்ற அண்ணனை போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீவைகுண்டம்:
வல்லநாடு அருகே பிளஸ்-2 மாணவியை கொன்ற அண்ணனை போலீசார் கைது செய்தனர்.

மாணவி கொலை

வல்லநாடு அருகே உள்ள வசவப்பபுரம் பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் சுடலமுத்து. இவருக்கு மாலைராஜ் (வயது 22) என்ற மகனும், கவிதா (17) உள்பட 3 மகளும் உண்டு. இதில் கவிதா பிளஸ்-2 படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் வீட்டில் தனியாக இருந்த கவிதா தனது செல்போனை பார்த்துக் கொண்டு இருந்தார். அந்த சமயத்தில் வீட்டிற்கு மாலைராஜ் வந்தார். 

அப்போது, திடீரென்று மாலைராஜ், கவிதாவுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மாலைராஜ் வீட்டில் இருந்த அரிவாளால் கவிதாவை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார். பின்னர் அவர் அங்கு இருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

அண்ணன் கைது

இதுகுறித்து தகவல் அறிந்த முறப்பநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கவிதா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மாலைராஜை தேடிவந்தனர். 

இந்த நிலையில் வசவப்பபுரம் அருகே உள்ள அனவரதநல்லூர் பகுதியில் பதுங்கி இருந்த மாலைராஜை போலீசார் நேற்று கைது செய்தனர்.
அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது, கொலைக்கான காரணம் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

செல்போனில் விளையாட்டு

பிளஸ்-2 மாணவியான கவிதா படிப்பதற்காக வாங்கிக் கொடுத்த செல்போனில் எப்போதும் கேம் விளையாடுவது, சமூக வலைத்தளங்களை பார்ப்பதை வழக்கமாக கொண்டு இருந்தார். 

இதை அவரது அண்ணன் மாலைராஜ் கண்டித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதேபோல் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டு இருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த மாலைராஜ், கவிதா செல்போனை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. 
இந்த நிலையில் நேற்று முன்தினம் கவிதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் செல்போனை பார்த்துக் கொண்டு இருந்தார். 
அப்போது, அங்கு வந்த மாைலராஜ், கவிதாவுடன் தகராறில் ஈடுபட்டார். பின்னர் அரிவாளால் கவிதாவை வெட்டிக் கொலை செய்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

Next Story