பாலத்தில் கார் மோதி டிரைவர் உள்பட 2 பேர் பலி
வேடசந்தூர் அருகே டயர் வெடித்து எதிர்புறத்தில் உள்ள பாலத்தில் கார் மோதியது. இந்த விபத்தில் டிரைவர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
வேடசந்தூர்:
டயர் வெடித்து விபத்து
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தை சேர்ந்தவர் பிரபு (வயது 30). திண்டுக்கல்லில் வசித்து வரும் இவருடைய உறவினர் ஒருவருக்கு திருமண ஏற்பாடு நடந்து வருகிறது.
இது தொடர்பாக ஆலோசிப்பதற்காக பிரபு மற்றும் அவருடைய உறவினர்கள் 4 பேர் நேற்று திண்டுக்கல் வந்தனர். இங்கு நடைபெறும் திருமண ஏற்பாடு குறித்து உறவினர்களிடம் பேசி விட்டு 5 பேரும் கோபிச்செட்டிபாளையம் நோக்கி நேற்று மதியம் காரில் புறப்பட்டனர். காரை, ஹரிபிரசாத் (31) என்பவர் ஓட்டினார்.
திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலையில் காா் சென்று கொண்டிருந்தது. வேடசந்தூர் அருகே உள்ள கல்வார்பட்டி மேம்பாலத்தில் வந்தபோது, திடீரென காரின் முன்பக்க டயர் வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது.
சினிமாவை மிஞ்சும் வகையில், எதிர்புறத்தில் உள்ள சாலைக்கு கார் பறந்து சென்றது. பின்னர் சாலையின் மற்றொரு பக்கத்தில் உள்ள பாலத்தில் மோதி கார் நின்றது.
2 பேர் பலி
இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரின் இடிபாடுகளில் சிக்கி, டிரைவர் ஹரிபிரசாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் காரில் பயணம் செய்த பிரபு, எழில்வேந்தன் (30), நவீன் (29), ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியை சேர்ந்த இளையநம்பி (25) ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
இவர்கள் இடிபாடுகளில் சிக்கி அலறினர். அந்த சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் விபத்து குறித்து தகவல் அறிந்த கூம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
பின்னர் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்த 4 பேரை மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் வழியிலேயே இளையநம்பி பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்தில் காயம் அடைந்த 3 பேருக்கு, திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த விபத்து குறித்து கூம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story