75 நாட்களுக்கு பிறகு நாகை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்


75 நாட்களுக்கு பிறகு நாகை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்
x
தினத்தந்தி 30 Jun 2021 10:00 PM IST (Updated: 30 Jun 2021 10:00 PM IST)
t-max-icont-min-icon

75 நாட்களுக்கு பிறகு நாகை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

வெளிப்பாளையம்:-

75 நாட்களுக்கு பிறகு நாகை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

மீன்பிடி தடைகாலம்

கடலில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 14-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை மீன்பிடி தடை காலம் அறிவிக்கப்படுகிறது. வழக்கம்போல் இந்த ஆண்டும் தடைகாலம் அறிவிக்கப்பட்டு, கடந்த மாதம் (ஜூன்) 14-ந் தேதி வரை அமலில் இருந்தது. 
தடைகாலம் நிறைவு பெற்றபோதிலும், நாகை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகமாக இருந்ததால் மீன்பிடிக்க மீனவர்கள் செல்லவில்லை. ஊரடங்கு உத்தரவின் காரணமாக படகுகளை தயார் செய்வதற்கும் மீனவர்களுக்கு சிரமம் ஏற்பட்டது. 

ரூ.1 கோடி இழப்பு

கடைகள் திறக்கப்படாததால் படகுகளை மராமத்து செய்ய தேவையான பொருட்கள், வலைகளை சீர் செய்ய தேவையான நூல் போன்ற பொருட்களை மீனவர்களால் வாங்க முடியவில்லை. இந்த காரணங்களால் நாகை மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரம் விசைப்படகுகள், 5 ஆயிரம் பைபர் படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. 
படகுகள் அனைத்தும் கரையில் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் 1 லட்சம் மீனவர்கள் வேலையிழந்து நாள் ஒன்றுக்கு ரூ.1 கோடி மதிப்பில் வர்த்தகம் இழப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் நாகை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறைய தொடங்கி உள்ளதால் நேற்று முதல் ஆழ்கடல் சென்று மீன்பிடிக்க நாகை மாவட்ட மீனவர்கள் முடிவு செய்தனர். 

ஆழ்கடல் மீன்பிடிப்பு

இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு கரையில் நிறுத்தப்பட்டிருந்த படகுகளை தயார்படுத்தினர். என்ஜின்கள் பழுது நீக்கம் செய்யப்பட்டு வர்ணம் பூசப்பட்டது. ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வர குறைந்தது ஒரு வார காலம் ஆகும். எனவே அதற்கு தேவையான டீசல், தண்ணீர், ஐஸ்கட்டிகள், சமையலுக்கு தேவையான உணவு பொருட்கள், பாத்திரங்கள் ஆகியவற்றை விசைப்படகுகளில் ஏற்றினர். 
75 நாட்களுக்கு பிறகு நாகை மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க ஆழ்கடல் செல்வதால் மீன்கள் அதிக அளவில் கிடைக்க வேண்டும் என வேண்டி தங்களுடைய படகுகளுக்கு பூஜை போட்டனர். இதன் பின்னர் நாகையில் இருந்து 500-க்கும் அதிகமான விசைப்படகுளில் மீனவர்கள் 75 நாட்களுக்கு பிறகு நேற்று மதியம் கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டு சென்றனர். அக்கரைபேட்டை, கீச்சாங்குப்பம், நாகூர் உள்ளிட்ட 64 மீனவ கிராமங்களில் இருந்தும் மீனவர்கள் 75 நாட்களுக்கு பின்னர் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டனர். 

Next Story