பயணிகள் வருகை அதிகரிப்பால் கூடுதல் பஸ்களை இயக்க முடிவு
திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் பயணிகள் வருகை அதிகரிப்பால் கூடுதல் பஸ்களை இயக்குவதற்கு முடிவு செய்யப்பட்டு உள்ளதாக போக்குவரத்து கழக மண்டல பொதுமேலாளர் கணேசன் கூறினார்.
திண்டுக்கல்:
பஸ் போக்குவரத்து
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த மே மாதம் 10-ந்தேதி பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் பஸ்கள், ஆட்டோ உள்ளிட்ட வாடகை வாகனங்கள் இயக்கப்படவில்லை.
அதன்பின்னர் கொரோனா தொற்று குறைந்ததால் ஆட்டோ உள்ளிட்ட வாடகை வாகனங்கள் இயக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து கடந்த 28-ந்தேதி முதல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதில் திண்டுக்கல் மண்டலத்தை பொறுத்தவரை திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 800 அரசு பஸ்கள் உள்ளன. இவற்றில் திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் மொத்தம் 600 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இந்த பஸ்கள் அனைத்தும் பணிமனையில் இருந்து வெளியேறும் போதும், இரவில் பணிமனைக்கு வரும்போதும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.
பயணிகள் கூட்டம்
மேலும் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றும் வகையில் பஸ்களில் 50 சதவீத பயணிகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு உள்ளது.
அதேபோல் பயணிகள் கூட்டத்தை தவிர்க்கும் வகையில் கூடுதல் பஸ்களை இயக்குவதற்கு வசதியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
எனினும் திண்டுக்கல், பழனி, தேனி உள்பட பல பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிகள் கூட்டம் அலைமோத தொடங்கி விட்டது. எனவே கூடுதல் பஸ்களை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
கூடுதல் பஸ்கள்
இதுகுறித்து மண்டல பொதுமேலாளர் கணேசன் கூறுகையில், திண்டுக்கல் மண்டலத்தில் தற்போது 75 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் அனைத்து வழித்தடங்களிலும் பயணிகளின் கூட்டத்தை பொறுத்து கூடுதல் பஸ்களை இயக்குவதற்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதன்படி தேவைக்கு ஏற்ப கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இதற்கிடையே பயணிகளின் வருகை அதிகரித்து இருப்பதால் நாளை (இன்று) முதல் கூடுதல் பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அனைத்து வழித்தடங்களிலும் பயணிகளின் கூட்டத்தை பொறுத்து கூடுதல் பஸ்கள் இயக்கப்படும்.
மேலும் மதுரை உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கு பஸ்களை இயக்குவதில் சுங்கசாவடி பிரச்சினை எதுவும் இல்லை, என்றார்.
Related Tags :
Next Story