பள்ளி ஆசிரியர் உள்பட 4 பேர் ஆற்றில் மூழ்கி பலி
திண்டுக்கல் அருகே குளிக்க சென்றபோது ஆற்றில் மூழ்கி பள்ளி ஆசிரியர் உள்பட 4 பேர் பலியானார்கள்.
திண்டுக்கல் :
ஆற்றில் ஆனந்த குளியல்
திண்டுக்கல் அருகே உள்ள என்.பாறைப்பட்டியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 30). தனியார் பள்ளி ஆசிரியர். இவர், தனது வீட்டில் மாணவர்களுக்கு டியூசன் எடுத்து வந்தார். அவருடைய மனைவி அர்ச்சனா (19). இந்த தம்பதிக்கு திருமணமாகி 2 வருடங்கள் ஆகிறது.
சக்திவேலின் அண்ணன் தீனதயாளன். அவருடைய மகள் சத்யபாரதி (11). சின்னமல்லனம்பட்டியை சேர்ந்தவர் மற்றொரு சக்திவேல். அவருடைய மகள் ஐஸ்வர்யா (14).
ஆசிரியர் சக்திவேல், அர்ச்சனா, சத்யபாரதி, ஐஸ்வர்யா ஆகிய 4 பேரும் நேற்று அதே பகுதியில் உள்ள சந்தனவர்த்தினி ஆற்றுக்கு குளிக்க சென்றனர். அங்கு ஆனந்தமாய் அவர்கள் குளித்து கொண்டிருந்தனர்.
குழந்தைகளை காப்பாற்ற முயன்ற தம்பதி
சந்தனவர்த்தினி ஆற்றில் சமூகவிரோதிகள் சிலர், மணல் அள்ளி செல்வதால் பள்ளம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் பெய்த மழையினால் பள்ளமான இடங்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதில் ஒரு இடத்தில் தேங்கி இருந்த தண்ணீரில் அவர்கள் 4 பேரும் குளித்தனர்.
அப்போது சத்யபாரதி, ஐஸ்வர்யா ஆகியோர் திடீரென்று ஆழமான பகுதிக்கு சென்று தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தனர். இதை பார்த்த சக்திவேல், அர்ச்சனா ஆகியோர் 2 சிறுமிகளையும் காப்பாற்ற முயன்றனர். அப்போது அவர்களும் அடுத்தடுத்து தண்ணீரில் மூழ்கினர்.
பின்னர் அவர்கள் 4 பேரும் அபயகுரல் எழுப்பினர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் 4 பேரும் தண்ணீரில் மூழ்கினர்.
4 பேர் உடல்கள் மீட்பு
இதனையடுத்து அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். பின்னர் தண்ணீரில் மூழ்கிய 4 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். பின்னர் ஆற்றில் இறங்கி தீயணைப்பு படையினர் தேடினர்.
சுமார் ½ மணி நேர தேடுதலுக்கு பிறகு 4 பேரும் பிணமாக மீட்கப்பட்டனர். இதையடுத்து 4 பேரின் உடல்களும், பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கிராம மக்கள் சோகம்
இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன், சப்-இன்ஸ்பெக்டர் விஜய் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பலியான 4 பேரின் உடல்களை பார்த்து அவர்களின் உறவினர்கள் கதறி அழுத காட்சி கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. தண்ணீரில் மூழ்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் என்.பாறைப்பட்டி கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
-----------
Related Tags :
Next Story