விக்கிரவாண்டி அருகே நீரில் மூழ்கி அண்ணன்-தங்கை பலி


விக்கிரவாண்டி அருகே நீரில் மூழ்கி அண்ணன்-தங்கை பலி
x
தினத்தந்தி 30 Jun 2021 10:27 PM IST (Updated: 30 Jun 2021 10:27 PM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டி அருகே கிணற்றில் குளித்துக்கொண்டிருந்த அண்ணன்-தங்கை நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

விக்கிரவாண்டி, 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த சித்தணி கிராமத்தை சேர்ந்தவர் குமார்(வயது 30). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சங்கரி(25). இவர்களுக்கு தினேஷ்(5) என்ற மகனும், சத்யஸ்ரீ(4) என்ற மகளும் இருந்தனர். 

இந்த நிலையில் விக்கிரவாண்டி அடுத்த ஆசூர் கிராமத்தில் சங்கரியின் பெரியம்மாள், பெரியநாயகி இறந்து விட்டார். இவருடைய கருமகாரியம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக குமார் தனது குடும்பத்தினருடன் ஆசூர் கிராமத்திற்கு வந்திருந்தார். 

நீரில் மூழ்கினர்

மாலை 4 மணியளவில், தினேஷ், சத்யஸ்ரீ மற்றும் அப்பகுதியை சோ்ந்த சிறுவர்களுடன் பெற்றோருக்கு தெரியாமல் அப்பகுதியில் உள்ள கிணற்றுக்கு குளிக்க சென்றனர். 
இதில் நீச்சல் தெரியாததால் தினேஷ், சத்யஸ்ரீ இருவரும் நீரில் மூழ்கினர். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற சிறுவர்கள் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று சத்தம் போட்டனர். இந்த சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து கிணற்றில் குதித்து குழந்தைகளை மீட்டனர். 

போலீசார் விசாரணை

அப்போது இருவரும் மயங்கிய நிலையில் இருந்ததால் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவர்களை பாிசோதித்த டாக்டர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிணற்றில் குளிக்க சென்ற அண்ணன்-தங்கை நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story