வனகாப்பாளர் பணியிடை நீக்கம்
கோத்தகிரியில் அனுமதியின்றி மரங்கள் வெட்டியதை கவனிக்க தவறிய வனகாப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் இது தொடர்பாக வனச்சரகர் உள்பட 2 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
ஊட்டி,
கோத்தகிரியில் அனுமதியின்றி மரங்கள் வெட்டியதை கவனிக்க தவறிய வனகாப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் இது தொடர்பாக வனச்சரகர் உள்பட 2 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
9 நாவல் மரங்கள்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வனச்சரகத்துக்கு உட்பட்ட கீழ்கோத்தகிரியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான தேயிலை தோட்டத்தில் வளர்க்கப்பட்ட மரங்கள், தமிழ்நாடு மலைப்பகுதி (மரங்கள் பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட மாவட்ட குழுவின் அனுமதியின்றி வெட்டப்பட்டதாக வனத்துறையினருக்கு புகார் வந்தது.
இதையடுத்து வனத்துறையினர், சம்பந்தப்பட்ட தேயிலை தோட்டத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் 9 நாவல் மரங்கள் அனுமதியின்றி வெட்டப்பட்டது கண்டறியப்பட்டது.
நீதிமன்றத்தில் வழக்கு
பின்னர் இது தொடர்பாக தொட்டனையட்டி கிராமத்தை சேர்ந்த நில உரிமையாளர் கவுரி, சோலூர்மட்டத்தை சேர்ந்த ஸ்டீபன் ஆகிய 2 பேர் மீது தமிழ்நாடு மலைப்பகுதி (மரங்கள் பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து உரிய விசாரணை நடத்திய பிறகு குழுவின் அனுமதி பெற்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
பணியிடை நீக்கம்
இதற்கிடையே கோத்தகிரி வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் அனுமதியின்றி மரங்கள் வெட்டப்பட்டதை கவனிக்க தவறியதாக வனகாப்பாளர் தர்மராஜை பணியிடை நீக்கம் செய்து நீலகிரி வன கோட்ட அலுவலர் குருசாமி உத்தரவிட்டார்.
மேலும் கோத்தகிரி வனச்சரகராக பணிபுரிந்து வந்த செல்வகுமார், கோவை மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். வனவராக பணிபுரிந்த திருமூர்த்தி, ஊட்டிக்கு பணியிட மாற்றம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
பரபரப்பு
ஏற்கனவே நீலகிரி வன கோட்டத்தில் நடுவட்டம் வனச்சரகத்தில் அனுமதியின்றி மரங்கள் வெட்டப்பட்ட சம்பவத்தில் 2 வனச்சரகர்கள் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது வனக்காப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன், 2 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story