பென்னாகரத்தில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் தீவிரம்


பென்னாகரத்தில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 30 Jun 2021 10:49 PM IST (Updated: 30 Jun 2021 10:49 PM IST)
t-max-icont-min-icon

பென்னாகரத்தில் புதிய பஸ் நிலையத்துக்கான கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பென்னாகரம்:

பென்னாகரம்
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியானது அதிக மலைகள் சூழ்ந்த பகுதியாகவும், 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை கொண்டவையாக உள்ளது. இந்த நிலையில், பென்னாகரத்தை மையமாக கொண்டு கடந்த 1989-ம் ஆண்டு பஸ்நிலையம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது. 
பென்னாகரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான தாசம்பட்டி, முதுகம்பட்டி, பருவதனஅள்ளி, மாங்கரை, கோடுப்பட்டி, ராஜாவூர், ஒகேனக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராம மக்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு வெளிமாவட்டங்களுக்கு மற்றும் வெளிமாநிலங்களுக்கு செல்ல பென்னாகரம் பஸ் நிலையத்தை பயன்படுத்தி வந்தனர். 
இந்த பஸ் நிலையமானது பென்னாகரம் பேரூராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வந்தது. இங்கு 30-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வந்தன. இந்த பஸ் நிலையம் கட்டி முடிக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேலானதால், அங்குள்ள வணிக வளாக கட்டிடங்கள் பழுதடைந்து, ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு காணப்பட்டன. 
புதிய பஸ் நிலையம்
பென்னாகரம் பகுதிக்கு புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் தமிழக அரசானது பென்னாகரம் பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்காக மூலதன மானிய நிதியில் இருந்து ரூ.4½ கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான பணிகளை தொடங்கும் வகையில் பழைய கட்டிடங்களை கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடிக்கும் பணி நடைபெற்று வந்தது. 
பென்னாகரம் பஸ் நிலையம் தற்காலிகமாக வட்டார வளர்ச்சி அலுவலகம் பகுதிக்கு மாற்றப்பட்டு வந்தது. அதைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் 4-ந் தேதி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் பென்னாகரம் புதிய பஸ் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார். 
அதன்பிறகு தமிழக சட்டசபை பொதுத்தேர்தல், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் போன்ற காரணங்களால் புதிய பஸ் நிலையம் கட்டுமான பணி கடந்த சில மாதங்களாக தாமதமானது. இந்த நிலையில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான பணிகள் மீண்டும் தொடங்கி உள்ளது.  பஸ் நிலையம் அமைய உள்ள இடத்தில், கட்டிடம் கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story