பழங்குடியின பெண்களால் இயங்கும் பெட்ரோல் விற்பனை நிலையம்
தமிழகத்தில் முதன்முறையாக ஊட்டியில் பழங்குடியின பெண்களால் பெட்ரோல் விற்பனை நிலையம் இயங்குகிறது.
ஊட்டி,
தமிழகத்தில் முதன்முறையாக ஊட்டியில் பழங்குடியின பெண்களால் பெட்ரோல் விற்பனை நிலையம் இயங்குகிறது.
பெட்ரோல் விற்பனை நிலையம்
நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 7 லட்சத்து 35 ஆயிரம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில் பழங்குடியின மக்கள் 27 ஆயிரம் பேர் உள்ளனர். தற்போதைய காலகட்டத்திலும் அவர்கள் பாரம்பரியம் மாறாமல் வாழ்ந்து வருகின்றனர். அவர்களது வாழ்வாதாரம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது.
இந்த நிலையில் தமிழக பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் மூலம் மத்திய பழங்குடியினா் நல அமைச்சகம் மற்றும் தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பழங்குடியின பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஊட்டி அருகே முத்தோரை பாலடாவில் பெட்ரோல் விற்பனை நிலையம் தொடங்கப்பட்டு உள்ளது.
12 பேர் பணி நியமனம்
சமீபத்தில் ஆராய்ச்சி மையம் அருகே பழங்குடியின பெண்கள் நடத்தும் பெட்ரோல் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. அங்கு காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை, மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை என சுழற்சி முறையில் பெண்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
இதுகுறித்து பழங்குடியினர் ஆராய்ச்சி மைய இயக்குனர் உதயகுமார் கூறியதாவது:- நீலகிரியில் அழிவின் விளிம்பில் உள்ள தோடர், கோத்தர், இருளர், காட்டுநாயக்கர், பனியர் உள்பட 6 வகையான பழங்குடியின மக்களில் தலா 2 பெண்கள் என மொத்தம் 12 பேர் கலெக்டர் மூலம் நேரடியாக தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலைக்கு நியமிக்கப்பட்டனர்.
விலை குறைவு
இது தமிழகத்திலேயே முதன்முறையாக ஊட்டியில் பழங்குடியின பெண்கள் மூலம் இயங்குவது குறிப்பிடத்தக்கது. இது வெற்றி பெறும் சமயத்தில் மற்ற இடத்திலும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். தொலைதூரத்தில் இருந்து அவர்கள் வருவதால் பழங்குடியின ஆராய்ச்சி மையம் மூலம் அவர்களை தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாதந்தோறும் ரூ.8,500 மற்றும் 3 சதவீத அகவிலைப்படி அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.
ஒரு ஆண்டில் வரும் லாபம் 6 பங்காக பிரித்து பழங்குடியின மக்களுக்கு புதிய திட்டங்கள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் மற்ற இடங்களை காட்டிலும் 87 பைசா விலை குறைவாக விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
வாழ்வாதாரம் மேம்பட...
இதுகுறித்து பழங்குடியின பெண்கள் கூறும்போது, ஊரடங்கால் குடும்பத்தில் உள்ள ஆண்களுக்கு சரிவர வேலை கிடைக்கவில்லை. இதனால் வருவாய் இன்றி இருந்தோம். தற்போது வேலைவாய்ப்பு கிடைத்து உள்ளதால், வாழ்வாதாரம் மேம்பட உதவியாக உள்ளது என்றனர்.
Related Tags :
Next Story