நெல்லையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை கலெக்டர் விஷ்ணு நேரில் ஆய்வு
நெல்லையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை கலெக்டர் விஷ்ணு நேரில் ஆய்வு செய்தார்.
நெல்லை:
நெல்லையில் “ஸ்மார்ட் சிட்டி” திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை மாவட்ட கலெக்டர் விஷ்ணு நேற்று ஆய்வு செய்தார்.
“ஸ்மார்ட் சிட்டி” திட்ட பணிகள்
நெல்லை மாநகராட்சி பகுதியில் “ஸ்மார்ட் சிட்டி” திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் மற்றும் கட்டமைப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன் முன்னிலையில், மாவட்ட கலெக்டர் விஷ்ணு நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது பாளையங்கோட்டையில் ரூ.13.8 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் நவீன பஸ்நிலைய கட்டுமான பணிகளை பார்வையிட்டார்.
மேலும் நெல்லை புதிய பஸ்நிலைய வளாகத்தில் ரூ.11.75 கோடியில் நடைபெற்று பணிகள் முடிந்துள்ள நவீன அடுக்குமாடி வாகனங்கள் நிறுத்தும் இடம், ரூ.14.27 கோடியில் புனரமைக்கப்படும் புதிய பஸ் நிலைய வளாக வளர்ச்சி பணிகளையும், அந்த வளாகத்தினுள் ரூ.13.20 கோடியில் நடைபெற்று வரும் நவீன கட்டிட கட்டுமான பணிகள், ரூ.11.50 கோடியில் நடைபெற்று வரும் கூடுதல் கட்டிட கட்டுமான பணிகள், ரூ.9.41 கோடியில் மேற்குப்பகுதியில் தொடங்கப்பட்டுள்ள அடுக்குமாடி இருசக்கர வாகன கட்டுமான பணிகள், ரூ.13.71 கோடியில் வடக்குப் பகுதியில் தொடங்கப்பட்டுள்ள அடுக்குமாடி இருசக்கர வாகன கட்டுமான பணிகள், ரூ.14 கோடியே 68 லட்சத்தில் நயினார்குளம் ஏரியின் கரையோரத்தில் நடைபெறும் நவீன நடைமேடை மற்றும் மேம்பாட்டு பணிகள் ஆகியவற்றையும் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
கட்டுமான பணிகள்
அப்போது கலெக்டர் விஷ்ணு சம்பந்தப்பட்ட பொறியாளர் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் கூறியதாவது:-
நெல்லை மாநகராட்சியில் நடைபெற்று வரும் "ஸ்மார்ட் சிட்டி" திட்ட பணிகள் மற்றும் இதர வளர்ச்சிப் பணிகள் யாவும் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு பணியின் காரணமாக, கட்டுமான பணிகளில் காலதாமதம் ஏற்பட்டு இருப்பினும், தற்போது அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றும் விதமாக, பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
பாளையங்கோட்டையில் நடைபெற்று வரும் நவீன பஸ் நிலைய கட்டுமான பணிகள் 70 சதவீதம் முடியும் தருவாயில் உள்ளது. அதேபோன்று புதிய பஸ் நிலைய வளாகத்தில் நவீன அடுக்குமாடி வாகனங்கள் நிறுத்தும் இடம் அமைக்கும் பணி முழுமையாக முடிவுற்று உள்ளது பாராட்டுக்குரியது.
நவீன நடை மேடை
அத்துடன் 1½ கிலோ மீட்டர் தூரம் நயினார்குளம் சாலையை நவீனப்படுத்தும் விதமாக, கரையோரத்தில் 1 கிலோ மீட்டர் தூரத்தில் நவீன நடை மேடை அமைக்கும் பணியையும், நடைமேடையில் குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்கா அமைக்கும் பணியையும் துரிதமாக செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது நெல்லை "ஸ்மார்ட் சிட்டி" நிர்வாக இயக்குனர் நாராயண நாயர், செயற்பொறியாளர் (பணிகள்) பாஸ்கர், உதவி செயற்பொறியாளர் சாந்தி, உதவி ஆணையர்கள் அய்யப்பன், சுகி பிரேமா, உதவி பொறியாளர்கள் பைஜூ, லெனின், சுப்பிரமணியன் மற்றும் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story