திருச்சி விமான நிலையத்தின் ஓடுபாதை விஸ்தரிப்புக்கு சவாலாக உள்ள வழக்குகள் நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் தொடர்கிறது
திருச்சி விமான நிலையத்தின் ஓடுபாதையை விஸ்தரிப்பு செய்வதற்கு வழக்குகள் சவாலாக இருந்து வருகின்றன. இதன் காரணமாக நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
திருச்சி,
திருச்சி விமான நிலையத்தின் ஓடுபாதையை விஸ்தரிப்பு செய்வதற்கு வழக்குகள் சவாலாக இருந்து வருகின்றன. இதன் காரணமாக நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
திருச்சி விமான நிலையம்
திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு 75 ஆண்டுக்கும் மேலான வரலாறு உள்ளது. இரண்டாம் உலகப்போரின்போது போரில் பங்கேற்ற விமானப்படை விமானங்களுக்கு இது எரிபொருள் நிரப்பும் தளமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. போர் முடிவுக்கு வந்து நமது நாடு சுதந்திரம் அடைந்த பின்பு இந்த விமான நிலையம் சிவில் போக்குவரத்து விமான நிலையமாக மாற்றம் செய்யப்பட்டது.
தற்போது திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கட்டுமானப் பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய முனையம் திறக்கப்பட்டால் திருச்சி விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் சுமார் 3 ஆயிரம் பயணிகளை கையாளக்கூடிய அளவிற்கு மேம்படுத்தப்பட்டு விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓடுபாதை நீட்டிப்பு
திருச்சி விமான நிலையத்தை மிகப்பெரிய அளவில் விரிவுபடுத்துவதற்காக 536 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதில் விமான நிலையத்தின் தெற்கு பகுதியில் பாதுகாப்புத்துறைக்குச் சொந்தமான 370 ஏக்கரும் அடங்கும். இதுதவிர விமான நிலையத்தின் கிழக்குப்பகுதி மற்றும் தெற்கு, வடக்கு பகுதிகளில் உள்ள நிலங்களும் கையகப்படுத்த படவேண்டியது உள்ளது.
விமான நிலையத்தின் விஸ்தரிப்பு பணியில் மிக முக்கியமானது ஓடுபாதை (ரன்வே) நீட்டிப்பு மிக இன்றியமையாததாகும். திருச்சி விமான நிலையத்தில் உள்ள தற்போதைய ஓடு பாதையின் நீளம் 8,136 அடிகள் ஆகும். இந்த ஓடுபாதையில் போயிங் ரக மிகப்பெரிய விமானங்கள் மற்றும் சரக்கு விமானங்கள் இறங்கவும் முடியாது, ஏறவும் முடியாது. இதன் காரணமாக விமான நிலையத்தின் ஓடுபாதையை 12,500 அடிகளுக்கு நீட்டிப்பு செய்வதற்கு ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டது.
நிலம் கையகப்படுத்தல்
ஓடுபாதை விஸ்தரிப்புக்கு தேவையான நிலம் முழுவதும் விமான நிலையத்தின் கிழக்குப்பகுதியில் கையகப்படுத்துவது என திட்டமிடப்பட்டது.
இதற்காக கடந்த 2018-ம் ஆண்டு மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு நிலம் எடுப்பதற்காக சிறப்பு தாசில்தார் மற்றும் அவருக்கு உதவியாக நில அளவையர் மற்றும் பணியாளர்களும் நியமிக்கப்பட்டனர்.
ஓடுபாதை விஸ்தரிப்புக்கு தேவையான நிலம் உள்ளிட்ட ஒட்டுமொத்தமாக 536 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவது இந்த குழுவின் முக்கிய நோக்கமாகும். ஆனால் இந்த குழுவால் எதிர்பார்த்த அளவு நிலத்தை மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்றும் கையகப்படுத்த முடியவில்லை.
சவாலாக உள்ள வழக்குகள்
இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. விமான நிலையத்தின் கிழக்குப்பகுதியில் கீழக்குறிச்சி, நத்தமாடிபட்டி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 80 ஏக்கர் நிலம் ஓடுபாதை விஸ்தரிப்புக்கு தேவைப்படுகிறது. அந்த இடம்
தற்போது விவசாய நிலங்களாகவும், குடியிருப்பு பகுதியாகவும் இருப்பதால் அவற்றை உடனடியாக கையகம் செய்ய முடியவில்லை.
மேலும் விவசாய நிலத்தை கையகப்படுத்த கூடாது. அதற்கு தடை விதிக்க வேண்டும் எனக்கோரி மதுரை ஐகோர்ட்டில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. மிகவும் சவாலாக உள்ள இந்த வழக்குகளில் ஆஜராகி வாதாடுவதற்கும், வருவாய் துறையினர் நிலம் கையகப்படுத்துவதற்கு தேவையான உத்தரவுகளை பெறுவதற்கும் மாநில அரசால் முடியவில்லை.
ரூ.12 கோடி இழப்பீடு
அதற்கு திறமையான வழக்கறிஞர்களும் இதுவரை நியமிக்கப்படவில்லை. இதன் காரணமாக நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மேலும் விமான நிலையத்தின் மேற்கு பகுதியில் திருச்சி- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையை தாண்டி சுமார் 30 ஏக்கர் நிலம் தேவை. இதில் தற்போது வரை 6 ஏக்கர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டு உள்ளது. அதற்குரிய இழப்பீட்டுத் தொகையான ரூ.12 கோடி நிலத்தின் உரிமையாளரான ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இன்னும் தேவையான நிலத்தில் 24 குடும்பத்தினர் குடியிருந்து வருகிறார்கள். அவர்கள் வீடுகளை காலி செய்யும் பட்சத்தில் அவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்கப்படவில்லை. மேலும் விமான நிலையத்தின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டி இருப்பவர்களுக்கும் மாற்று இடம் தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதன் காரணமாக திருச்சி விமான நிலையத்தின் ஓடுபாதை நீட்டிப்பு மற்றும் விரிவாக்கப் பணிகளில் தொடர்ந்து தாமத நிலை நீடித்து வருகிறது.
துரித நடவடிக்கை
ஓடுபாதை 12,500 அடி நீளத்திற்கு நீட்டிப்பு செய்யப்பட்டால் தான் திருச்சி விமான நிலையத்தில் தனியாக சரக்கு முனையம் தொடங்க முடியும். திருச்சி விமான நிலையத்தில் இருந்து அனைத்து வெளிநாடுகளுக்கும் சரக்குகளை அனுப்ப முடியும். இதன் மூலம் ஏற்றுமதியாகும் பொருட்களின் மூலம் விமான நிலையத்திற்கு கோடி, கோடியாக வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. திருச்சியில் தொழில் வளர்ச்சி ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு ஏற்றுமதி வர்த்தகம் தொடர்பான துறையில் வேலை வாய்ப்பு கிடைப்பதற்கும் வழி பிறக்கும். எனவே ஓடுபாதை நீட்டிப்புக்கு தேவையான நிலத்தை தாமதமின்றி கையகப்படுத்தி விமான நிலைய ஆணைய குழுவிடம் ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என விமான நிலைய வளர்ச்சி மற்றும் ஆலோசனை குழுவினர் கருத்து தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story