காதல் திருமணம் செய்த இளம்பெண் வெட்டிக் கொலை


காதல் திருமணம் செய்த இளம்பெண் வெட்டிக் கொலை
x
தினத்தந்தி 1 July 2021 1:54 AM IST (Updated: 1 July 2021 1:54 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளம் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அவரது தந்தையை போலீசார் கைது செய்தனர்.

காதல் திருமணம்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள தெற்கு காவலாகுறிச்சி ஆர்.சி.சர்ச் தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 45), கூலித்தொழிலாளி. இவரது மனைவி பாக்கியலட்சுமி. இவர்களுக்கு ஷாலோம் ஷீபா (18) என்ற மகள் உண்டு.
இவரும், அதே ஊரைச் சேர்ந்த முத்துராஜ் என்பவரும் காதலித்து வந்தனர். கடந்த ஆண்டு பெற்றோரின் எதிர்ப்பை மீறி ஷாலோம் ஷீபா முத்துராஜை திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த மாரிமுத்து தனது மகளை வீட்டில் சேர்க்காமல் இருந்துள்ளார். ஆனால், பாக்கியலட்சுமி தனது மகளுடன் பேசி வந்தார்.

கணவருடன் தகராறு

இந்த நிலையில் ஊரில் அம்மன் கோவில் திருவிழா நடந்தது. இதில் முத்துராஜ் தனது மனைவி ஷாலோம் ஷீபாவுடன் கலந்து கொண்டார். பின்னர் வீட்டிற்கு சென்றபோது கணவன்-மனைவிக்கு இடையே  திடீரென்று தகராறு ஏற்பட்டது. இதனால் ஷாலோம் ஷீபா தனது தாயாரிடம் இதுபற்றி கூறுவதற்காக வீட்டிற்கு சென்றார். 
அப்போது, கதவை மாரிமுத்து திறந்தார். உனக்கும் எனக்கும், சம்பந்தம் இல்லை. ஏன் எனது வீட்டிற்கு வருகிறாய் என்று சத்தம் போட்டார். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

வெட்டிக் கொலை

இதில் ஆத்திரம் அடைந்த மாரிமுத்து, ஷாலோம் ஷீபாவை சரமாரியாக தாக்கினார். பின்னர் அவரை வீட்டு வாசலில் போட்டு, அங்கு இருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. 
இதில் அவருக்கு தலை, கை ஆகியவற்றில் பலத்த வெட்டுக்காயம் விழுந்தது. இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மாரிமுத்து அங்கு இருந்து தப்பிச் சென்றுவிட்டார். இதை பார்த்த அங்கு இருந்தவர்கள் ஓடி வந்து உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த ஷாலோம் ஷீபாவை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஷாலோம் ஷீபா பரிதாபமாக உயிரிழந்தார்.

தந்தை கைது

இதுகுறித்து உடனடியாக ஊத்துமலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய மாரிமுத்துவை பிடித்து கைது செய்தனர்.    
ஆலங்குளம் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story