72 வயது மூதாட்டி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர்
நிலப்பிரச்சினை குறித்து 4 புகார்கள் அளித்தும் வழக்குப்பதிவு செய்யாமல், புகார் அளித்த 72 வயது மூதாட்டி மீதே கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பெங்களூரு:
நிலப்பிரச்சினை
பெங்களூரு அன்னபூர்னேஷ்வரிநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட நாகரபாவி அருகே வினாயகா லே-அவுட், 80 அடி ரோட்டில் வசித்து வருபவர் புஷ்பலதா. அதே பகுதியில் உள்ள இவருக்கு சொந்தமான நிலத்தை தங்களது நிலம் என்று சொந்தம் கொண்டாடி வருவதாக தெரிகிறது. இந்த நிலப்பிரச்சினை தொடர்பாக ஏற்கனவே புஷ்பலதா தொடர்ந்த வழக்கில், அவருக்கு சாதமாக தீர்ப்பு வந்திருந்தது.
ஆனாலும் புஷ்பலதாவை மிரட்டி, அவருக்கு சொந்தமான நிலத்தை அபகரிக்க சிலர் திட்டமிட்டு வந்ததாக தெரிகிறது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு புஷ்பலதாவின் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் சிலர், அவரை தாக்கியதுடன், மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
மூதாட்டி மீது வழக்குப்பதிவு
இந்த நிலப்பிரச்சினை தொடர்பாக சில மா்மநபர்கள் மீது கடந்த மார்ச் 11-ந் தேதி, ஏப்ரல் 5-ந் தேதி, கடந்த மாதம் (ஜூன்) 15 மற்றும் 16-ந் தேதிகளில் அன்னபூர்னேஷ்வரிநகா் போலீஸ் நிலையத்தில் புஷ்பலதா புகார் அளித்திருந்தார். ஏற்கனவே இந்த விவகாரத்தில் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தும், புஷ்பலதா கொடுத்த 4 புகார்களின் பேரில் அன்னபூர்னேஷ்வரிநகர் போலீசார் இதுவரை வழக்கு ஏதும் பதிவு செய்யாமல் இருந்து வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், நில அபகரிப்பில் ஈடுபட்ட கும்பலை கொலை செய்ய முயன்றதாக கூறி, மூதாட்டி புஷ்பலதா மீதே அன்னபூர்னேஷ்வரிநகர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது நில அபகரிப்பு கும்பலுக்கு ஆதரவாக அன்னபூர்னேஷ்வரிநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லோகித் செயல்படுவதாகவும், அதனால் புஷ்பலதா கொடுத்த புகாரின் பேரில் அவர் வழக்குப்பதிவு செய்யாமல், அவர் மீதே கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்திருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Related Tags :
Next Story