கியாஸ் சிலிண்டர் வினியோகிக்கும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்


கியாஸ் சிலிண்டர் வினியோகிக்கும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 1 July 2021 2:16 AM IST (Updated: 1 July 2021 2:16 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா முன்கள பணியாளர்களாக அறிவிக்க வலியுறுத்தி தஞ்சை மாவட்டத்தில், கியாஸ் சிலிண்டர் வினியோகிக்கும் தொழிலாளர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்காரணமாக மாவட்டம் முழுவதும் நேற்று கியாஸ் சிலிண்டர் வினியோகம் பாதிக்கப்பட்டது.

தஞ்சாவூர், ஜூலை.1-
கொரோனா முன்கள பணியாளர்களாக அறிவிக்க வலியுறுத்தி தஞ்சை மாவட்டத்தில், கியாஸ் சிலிண்டர் வினியோகிக்கும் தொழிலாளர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்காரணமாக மாவட்டம் முழுவதும் நேற்று கியாஸ் சிலிண்டர் வினியோகம் பாதிக்கப்பட்டது.
முன்கள பணியாளராக 
கொரோனா தொற்றின் தாக்கம் தமிழகம் முழுவதும் குறைந்து வந்தாலும் தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் தினசரி பாதிப்பு 200-ஐ தாண்டிய நிலையிலேயே உள்ளது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் டாக்டர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட 21 வகை தொழிலாளர்களை முன்கள பணியாளர்களாக மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன.
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காலத்திலும் தங்களது உயிரை பொருட்படுத்தாமல் சிலிண்டர் வினியோகிக்கும் தொழிலாளர்கள் தங்களையும் முன்கள பணியாளராக அறிவிக்க வேண்டும். வருங்கால வைப்பு நிதி மற்றும் மருத்துவ காப்பீடு, விபத்து காப்பீடு ஆகியவற்றை கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
வேலைநிறுத்தம்
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தமிழ்நாடு எல்.பி.ஜி. சிலிண்டர் டெலிவரி மேன் தொழிற்சங்க மாநில தலைவர் கணேஷ் அறிவித்திருந்தார். அதன்படி நேற்று தஞ்சை மாவட்டத்தில் கியாஸ் சிலிண்டர் வினியோகிக்கும் தொழிலாளர்கள் ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தஞ்சை மாவட்ட தலைவர் நடராஜன் தலைமையில், செயலாளர் துரைசுதாகர் முன்னிலையில் தஞ்சை ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கியாஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
25 ஆயிரம் சிலிண்டர் வினியோகம் பாதிப்பு
தஞ்சை மாவட்டத்தில் 70-க்கும் மேற்பட்ட கியாஸ் வினியோகிக்கும் ஏஜென்சிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கியாஸ் சிலிண்டர் வினியோகிக்கும் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் அனைவரும் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை மாவட்டத்தில் மட்டும் ஒரு நாளைக்கு 25 ஆயிரம் சிலிண்டர்கள் வீடுகளுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது. நேற்றைய வேலை நிறுத்தம் காரணமாக 25 ஆயிரம் கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்வது பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story