சேலம் அருகே விபத்து லாரி மோதி பிளஸ்-1 மாணவி பலி தாத்தா கண்முன்னே பரிதாபம்
சேலம் அருகே நடந்த விபத்தில் தாத்தா கண்முன்னே லாரி மோதி பிளஸ்-1 மாணவி பரிதாபமாக இறந்தார்.
சேலம்
பிளஸ்-1 மாணவி
சேலம் அருகே இளம்பிள்ளை கல்பாரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன், கூலித்தொழிலாளி. இவருடைய மூத்த மகள் ஈஸ்வரி (வயது 15). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோவிந்தன் தனது குடும்பத்தினருடன் அரூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். அங்கேயே அவர்கள் தங்கி இருந்தனர்.
நேற்று காலை அரூரில் இருந்து கோவிந்தன் தனது மனைவியை அழைத்து கொண்டு ஒரு மோட்டார் சைக்கிளிலும், ஈஸ்வரி தனது தாத்தா மணியுடன் (60) ஒரு மொபட்டிலும் சேலத்துக்கு வந்து கொண்டிருந்தனர். இவர்கள் சேலம் அருகே உள்ள அமானி கொண்டலாம்பட்டி பகுதியில் வந்தனர்.
பரிதாப சாவு
அப்போது விஜயவாடாவில் இருந்து கொச்சிக்கு இரும்பு கம்பி லோடு ஏற்றிக் கொண்டு வந்த லாரி ஒன்று மணியின் மொபட்டை உரசியதாக கூறப்படுகிறது. இதனால் நிலைத்தடுமாறி மொபட்டில் இருந்தவர்கள் கீழே விழுந்தனர். இதில் லாரியின் சக்கரம் ஈஸ்வரி மீது ஏறி இறங்கியது. அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். தாத்தா கண்முன்னே இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
மணி லேசான காயத்துடன் உயிர் தப்பினார். தகவல் அறிந்த கொண்டலாம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் மாணவியின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து லாரியை ஓட்டி வந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மனியாஷ் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story