வெடிகுண்டு வெடித்து பசுமாடு சாவு
மரக்காணம் அருகே மேய்ச்சலுக்கு விடப்பட்டு இருந்த போது வெடிகுண்டை கடித்ததில் பசு மாடு தாடை சிதைந்து பரிதாபமாக உயிரிழந்தது.
மரக்காணம், ஜூலை.1-
மரக்காணம் அருகே மேய்ச்சலுக்கு விடப்பட்டு இருந்த போது வெடிகுண்டை கடித்ததில் பசு மாடு தாடை சிதைந்து பரிதாபமாக உயிரிழந்தது. மேலும் அங்கு 7 குண்டுகள் சிக்கின.
குண்டு வெடித்து பசு மாடு சாவு
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த பெரிய கொழுவாரியை சேர்ந்தவர் மணி. இவர் பசுமாடுகள் வளர்த்து வருகிறார். நேற்று காலை ரங்கநாதபுரம் அடுத்த கழுவெளி நிலப்பகுதியில் மாடுகளை மேய்ச்சலுக்காக விட்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக பயங்கர சத்தம் கேட்டது. அதன் அருகில் மேய்ந்துகொண்டிருந்த பசு மாடு திடீரென்று சரிந்து விழுந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மணி, உடனே மாட்டின் அருகில் சென்று பார்த்தார். அப்போது தாடை சிதைந்த நிலையில் பசு மாடு இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
போலீசார் விசாரணை
இதுபற்றி தகவல் அறிந்த கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு அருண், மரக்காணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது கழுவெளி பகுதியில் காட்டுப்பன்றி, மான், முயல் மற்றும் பறவைகளை வேட்டையாடுவதற்காக மர்மநபர்கள் மண்ணில் நாட்டு வெடிகுண்டு புதைத்து வைப்பது வழக்கம்.
அப்படி வைத்து இருந்த குண்டை மேய்ச்சலுக்கு சென்ற பசு மாடு கடித்த போது வெடித்து சிதறி இறந்து இருக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர்.
7 வெடிகுண்டுகள் சிக்கின
இதனை தொடர்ந்து அந்த பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதா? என்று போலீசார் சோதனை செய்தனர். அப்போது 7 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதனை பத்திரமாக சேகரித்த போலீசார் கிளாப்பாக்கத்தில் வெடிமருந்து குடோனில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
கழுவெளி பகுதியில் நாட்டு வெடிகுண்டுகளை புதைத்து வைத்த மர்ம நபர்கள் யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாட்டு வெடிகுண்டு வெடித்து மாடு இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story