சென்னை விமான நிலையத்தில் ரூ.5 லட்சம் போதை மாத்திரைகள் பறிமுதல்


சென்னை விமான நிலையத்தில் ரூ.5 லட்சம் போதை மாத்திரைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 1 July 2021 11:59 AM IST (Updated: 1 July 2021 11:59 AM IST)
t-max-icont-min-icon

சென்னை விமான நிலையத்தில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய பன்னாட்டு தபால் சரக்ககப்பிரிவுக்கு விமானத்தில் வந்த பாா்சல்களை சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது நெதர்லாந்து நாட்டில் இருந்து ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள முகவரிக்கு ஒரு பாா்சலும், பிரான்ஸ் நாட்டில் இருந்து நாகர்கோவிலில் உள்ள முகவரிக்கு ஒரு பார்சலும் வந்தன.

அந்த பார்சல்களில் வாழ்த்து அட்டைகள் இருப்பதாக குறிப்பிட்டு இருந்தது. ஆனால் அதன் மீது சந்தேகம் கொண்ட சுங்க இலாகா அதிகாரிகள், பார்சல்களை பிரித்து பார்த்தபோது அதில் போதை மாத்திரைகள் கடத்தப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து 2 பார்சல்களில் இருந்தும் ரூ.5 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட விலை உயர்ந்த 105 போதை மாத்திரைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரித்தனர்.

பார்சல்களில் உள்ள முகவரிகளுக்கு சென்று விசாரித்தபோது அவை போலியானது என தெரியவந்தது. வெளிநாடுகளில் இருந்து கடத்தப்பட்டு வரும் போதை பொருட்களை கல்லூரி மாணவர்கள், வசதி படைத்த இளைஞர்களுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சுங்க இலாகா அதிகாரிகள் மேலும் விசாரித்து வருகின்றனர்.

Next Story