உடல்களை பிரேத பரிசோதனை செய்வதற்கு பணம் கேட்ட ஊழியர்கள்
திண்டுக்கல் அருகே ஆற்றில் மூழ்கி பலியான 4 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய அரசு மருத்துவமனை ஊழியர்கள் பணம் கேட்டதால் சாலை மறியல் நடந்தது.
திண்டுக்கல்:
ஆற்றில் மூழ்கி 4 பேர் பலி
திண்டுக்கல் அருகே என்.பாறைபட்டியை சேர்ந்தவர் ஆசிரியர் சக்திவேல். இவர் தனது மனைவி அர்ச்சனா மற்றும் 2 சிறுமிகள் ஆகியோர் நேற்று முன்தினம் மாலை அந்த பகுதியில் உள்ள சந்தனவர்த்தினி ஆற்றில் குளித்தனர்.
அப்போது சிறுமிகள் ஆழமான பகுதியில் சிக்கி தத்தளித்தனர். அதை பார்த்த சக்திவேலும், அர்ச்சனாவும் சிறுமிகளை காப்பாற்ற முயன்றனர். ஆனால் 4 பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 4 பேரின் உடல்களையும் மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக 4 பேரின் உடல்களும் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பரிசோதனைக்கு பணம்
இதற்கிடையே ஆசிரியர் சக்திவேல் உள்பட 4 பேரின் உடல்களும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதனால் ஆசிரியரின் உறவினர்கள், என்.பாறைபட்டியை சேர்ந்த மக்கள் ஏராளமானோர் மருத்துவமனையில் திரண்டனர்.
சிறுமிகள் உள்பட 4 பேர் பலியான சோகத்தில் பிரேத பரிசோதனை கூடம் அருகே நின்றனர்.
அப்போது 4 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனை செய்வதற்கு மருத்துவமனை ஊழியர்கள் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 4 பேர் உயிரிழந்த வேதனையில் இருந்த உறவினர்கள், பொதுமக்களுக்கு மருத்துவமனை ஊழியர்கள் பணம் கேட்டது ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
மறியல்
இதனால் அவர்கள் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பிரேத பரிசோதனைக்கு பணம் கேட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். அதன்பேரில் மறியலை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.இதனால் அந்த வழியாக சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.
-------
Related Tags :
Next Story