சிறுவணிகர்கள் நலவாரியத்தில் பதிவு கட்டணம் செலுத்தாமல் சேர்ந்து கொள்ளலாம். அமைச்சர் மூர்த்தி பேச்சு


சிறுவணிகர்கள் நலவாரியத்தில் பதிவு கட்டணம் செலுத்தாமல் சேர்ந்து கொள்ளலாம். அமைச்சர் மூர்த்தி பேச்சு
x
தினத்தந்தி 1 July 2021 8:27 PM IST (Updated: 1 July 2021 8:28 PM IST)
t-max-icont-min-icon

சிறுவணிகர்கள் நலவாரியத்தில் பதிவு கட்டணம் செலுத்தாமல் உறுப்பினர்களாக சேர்ந்து கொள்ளலாம்’ என்று வேலூரில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கூறினார்.

வேலூர்,

வேலூர் கோட்ட அளவில் வணிகர்களுடன் கலந்தாய்வு கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. வணிகவரித்துறை முதன்மை செயலாளர் ஜோதிநிர்மலா பெரியசாமி தலைமை தாங்கினார். எம்.பி.க்கள் கதிர்ஆனந்த், அண்ணாதுரை, ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., வணிகவரித்துறை கமிஷனர் சித்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வரவேற்றார். 

இதில், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த வணிகர் சங்கங்களின் பிரநிதிகள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளர்களாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி, சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு தமிழர் நலன்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு வணிகர் சங்க பிரதிநிதிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்து ஆலோசனைகள் வழங்கினர்.

கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேசும் போது கூறியதாவது:-

போலி பில்கள்

 வணிகர்களின் குறைகள், கோரிக்கைகள் கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க கோட்ட வாரியாக கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கூட்டத்தில் வணிகர்கள் தெரிவிக்கும் கருத்துகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து தீர்வு காணப்படும். வணிகவரித்துறையில் காணப்படும் அனைத்து குறைபாடுகளுக்கும் தீர்வு காணப்படும்.

 3 மாதங்கள் சிறுவணிகர்கள் நலவாரியத்தில் ரூ.500 பதிவு கட்டணம் செலுத்தாமல் உறுப்பினர்களாக சேர்ந்து கொள்ளலாம். இதன்மூல் வணிகர்களுக்கு மருத்துவம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கிடைக்கும். போலி பில்களை ஒழிக்க வணிகர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Next Story