பணித்தள பொறுப்பாளராக தி.மு.க. பிரமுகர் நியமனத்தை கண்டித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகை
அகரம் ஊராட்சியில் தி.மு.க. பிரமுகர் பணித்தள பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதை கண்டித்து தொழிலாளர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அணைக்கட்டு
தி.மு.க. பிரமுகர் நியமனம்
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றியம் அகரம் ஊராட்சியில் 23 கிராமங்கள் உள்ளது. இதில் மராட்டியபாளையம் கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை செய்து வருகின்றனர்.
இவர்களை கண்காணிக்கவும், எத்தனை பேர் வேலைக்கு வந்துள்ளார்கள் என்பதை பதிவேட்டில் பதிவு செய்யவும் பணித்தள பொறுப்பாளர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஒரு ஊராட்சிக்கு 2 அல்லது 3-க்கும் மேற்பட்ட பணித்தள பொறுப்பாளர் பணியில் உள்ளனர். இந்த நிலையில் அகரம் ஊராட்சி மராட்டிய பாளையம் பகுதியில் பூர்ணிமா என்பவர் கடந்த 9 ஆண்டுகளாக பணித்தள பொறுப்பாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் திடீரென நேற்று பூர்ணிமாவை நீக்கிவிட்டு தி.மு.க.வை சேர்ந்த பழனி என்பவரை பணித்தள பொறுப்பாளராக நியமித்து உள்ளனர்.
தொழிலாளர்கள் எதிர்ப்பு
இந்த தகவல் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு தெரியாததால் வழக்கம்போல் நேற்று வேலைக்கு சென்றனர். அப்போது புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட பணித்தள பொறுப்பாளர் பழனி பல்வேறு இடங்களில் வேலை செய்வதற்கு தொழிலாளர்களை 5 குழுக்களாக பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது தொழிலாளர்கள் ஏற்கனவே இருந்த பணித்தள பொறுப்பாளர் எங்கே? நீங்கள் எதற்கு எங்களை வேலை வாங்குகிறீர்கள் என்று கேட்டனர். அப்போது அவர் பணித்தள பொறுப்பாளராக நியமிக்கப்பட்டது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள், அவருடைய தலைமையின் கீழ் வேலை செய்ய மாட்டோம், பழைய பணித்தள பொறுப்பாளரை மீண்டும் நியமிக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகை
இதனையடுத்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒரு வேனில் சென்று அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் அலுவலகத்தில் இருந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கனகராஜ் மற்றும் சுதாகர் ஆகியோர் முற்றுகையிட்ட தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் தி.மு.க. பிரமுகர் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, பழைய பணித்தள பொறுப்பாளரான பூர்ணிமாவை பணியில் அமர்த்த வேண்டும் என வலியுறுத்தினர். இதனையடுத்து வட்டார வளர்ச்சி அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அதைத்தொடர்ந்து முற்றுகையில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.
அதிகாரிகள் விளக்கம்
இதுகுறித்து வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் கேட்டதற்கு மேலிடத்திலிருந்து வரும் உத்தரவுகளால் நாங்கள் இதுபோன்ற பணித்தள பொறுப்பாளர்களை நியமனம் செய்து வருகின்றோம். இந்த பணி நிரந்தரமானதல்ல. 100 நாள் வேலை திட்டத்தில் வழங்கும் ஊதியமே பணித்தள பொறுப்பாளர்களுக்கு வழங்கி வருகின்றோம் என்றனர்.
Related Tags :
Next Story