கடலூர் மாவட்ட ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு மூலம் பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்கல்


கடலூர் மாவட்ட ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு மூலம் பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்கல்
x
தினத்தந்தி 1 July 2021 9:46 PM IST (Updated: 1 July 2021 9:46 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் நேற்று முதல் மீண்டும் கைவிரல் ரேகை பதிவு மூலம் பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்கும் முறை, நடைமுறைக்கு வந்துள்ளது.

கடலூர், 

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அரசால் ரூ.4 ஆயிரம் உதவித்தொகை 2 தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டது. இதில் கடந்த ஜூன் மாதத்தில் ரூ.2 ஆயிரம் நிவாரண தொகையுடன், 14 வகை மளிகை பொருட்கள் தொகுப்பும் வினியோகம் செய்யப்பட்டது. இதனை அரிசி குடும்ப அட்டைதாரர்கள் தாமதமின்றி பெற்றுச்செல்லும் வகையில் கைவிரல் ரேகை மூலம் பதிவு செய்யும் முறை தற்காலிகமாக 2 மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. அதேபோல் புதிய மின்னணு குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்த மனுக்களுக்கு, ஒப்புதல் அளிப்பதற்கான சேவையும் கடந்த 2 மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்றுமுன்தினத்துடன் நிவாரண உதவித்தொகை மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் தொகுப்பு அனைவருக்கும் வழங்கி முடிக்கப்பட்டது.

புதிய குடும்ப அட்டை

அதனை தொடர்ந்து ஜூலை 1-ந் தேதி (அதாவது நேற்று) முதல் புதிய குடும்ப அட்டைக்கு ஒப்புதல் அளிக்கும் சேவை, புதிய குடும்ப அட்டை அச்சிடும் பணியை மேற்கொள்ளுதல் மற்றும் ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவையும் மீண்டும் செயல்முறைப்படுத்த அனுமதி வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ரேஷன் கடைகளில் நேற்று கைவிரல் ரேகை பதிவு செய்யப்பட்டு பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் முறை மீண்டும் நடைமுறைக்கு வந்தது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 1,420 ரேஷன் கடைகளிலும் விற்பனை முனைய எந்திரத்தில் பொதுமக்களின் கைவிரல் ரேகை பதிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. மேலும் புதிய மின்னணு குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தவர்களின் மனுக்களை வட்ட வழங்கல் அதிகாரிகள், உரிய முறையில் விசாரணை செய்து, தகுதியான மனுக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Next Story